Sunday, 18 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள்

                   ஈராக் போர்முனை அனுபவங்கள் .
   எனது சதாமின் அரண்மனையில் பதிவை படித்த நண்பர்கள் பலர் நீ ஈராக்கில் இருந்தாயா? என ஆச்சரியத்துடன் கேட்டனர்.
   கடந்த மார்ச் மாதம் நான் சந்தித்த எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் ஈராக் அனுவங்களை எழுதுங்கள் என்றார் .
   சதாமின் அரண்மனையில் பதிவை படித்தபின் மூத்த சகோதரியும் பேராசிரியையுமான லோகமாதேவி தேவியும்  போர்முனை அனுபவங்களை அறிய ஆர்வமாக இருக்கிறோம் எழுதுங்கள் என வேண்டினார்  எனவே ஈராக் போனது முதல் அங்கிருந்த 18 மாத அனுபவத்தையும் ஒரு தொடராக எழுதும் எண்ணம் 1 மணிநேரதிர்க்குமுன் தோன்றியது .இன்று முதல் நேரம் கிடைக்கையில் அந்த அனுபவங்களை  எழுதி எனது வலை பூவில் பதிவேற்றம் செய்வேன் .நண்பர்கள் தொடர்ந்து எனக்கு உற்சாகமும் ,விமர்சனகளும் எழுதுமாறு வேண்டுகிறேன் .
ஷாகுல் ஹமீது ,
18-09-2016.
                     ஈராக் போர்முனை அனுபவங்கள் .(1)
முதல் பயணம் .
      மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிகொண்டிருந்தேன் .நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு என்றாலும் .முன் அனுபவம் கேட்டார்கள் .யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும் .
   என் நண்பர்கள் பலரும் சமயற்கலை படித்தவர்கள் .நிறையபேர் உல்லாச கப்பல்களில் பணிக்கு போய்விட்டனர் .இன்னும் நிறையபேர் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
    அவ்வப்போது கிடைக்கும் சிறு,சிறு வேலைகள் செய்து நாட்கள் ஓடிகொண்டிருந்தது .
  2002 ம் ஆண்டு ஈராக் ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறது என அமெரிக்கா வேண்டுமென்றே ஈராக் மீது போர் தொடுத்தது .ஒன்றரை மாதங்களுக்குள் ஈராக் முழுமையும் தன் பிடிக்குள் கொண்டுவந்திருந்தது .
    2003 ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு நாள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு விளம்பரம், குவைத்துக்கு 75 நாட்களுக்கு ஆள் எடுக்கிறார்கள் என .அது ஒரு கேட்டரிங் நிறுவனம் .
  என் அறையில் இருந்த சாலமோன் லே மக்கா நீ இதுக்கு போய்பாரு வேலை கிடச்சா திரும்பி வந்து கப்பலுக்கு முயற்சி பண்ணலாம் .கையில் ரூ ஐம்பதாயிரம் இருக்கும் என்றான் .
   தெரிந்த பலர் போயிருந்தனர் .எனக்கு அந்த துறை தெரியாது .நண்பர்கள் வலுக்கட்டாயமாக சில பாடங்கள் சொல்லித்தந்து என்னை நேர்காணலுக்கு தயார்செய்தனர் .லேய் நீ இங்க பட்டினி கிடந்து சாவதுக்கு போயிட்டு வா  என்றனர் .
    நானும் நண்பர்ளுடன் சென்று விண்ணப்பித்தேன் நான் பஸ் பாய் எனும் வேலைக்கு  (லேபர் தான்,அதற்க்கு அப்படி ஒரு பெயர்) .எங்கள் அறையின் பின் புறமுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து 166 எண் பேருந்தில் ஏறினால் மும்பை தாதரில் உள்ள சித்தி விநாயகர் கோவில் அருகில் இறங்கி நடக்கும் தூரத்தில் உள்ள  ராயல் கன்சல்டன்சி க்கு போனோம்.என்னிடம் பேசிய ஒருவர் நீ ஏன் மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்ககூடாது என கேட்டார் .நான் வேண்டாம் என சொல்லி விட்டேன் .நண்பர்களின் பயிற்சி அப்படி என மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் .ஒரு வாரத்திற்கு பின் நேர்காணலுக்கு அழைத்தனர் .நல்ல கூட்டம் பெரும்பாலனவர்கள் டை அணிந்து வந்திருந்தனர் .ஆங்கிலம் பேச கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்றனர் .
    வெகுநேரம் காத்திருந்தபின் மாலையில் எங்கள் முறை வந்தபோது ஐந்து ,ஐந்து பேராக உள்ளே வரசொன்னார்கள் .ஒரு கறுப்பரும் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவரும் ,நைஜில் என ஒரு நியுசிலாந்து நாட்டை சார்ந்தவரும் சிரித்து வணக்கம் கூறி சில கேள்விகளை கேட்டனர் .என்னிடம் இரண்டு கேள்விகள் தான் .எந்த ஊர் உனக்கு ,எங்கு வேலை செய்கிறாய் ,கிரிக்கெட் விளையாட தெரியுமா ?அருகில் இருந்தவனிடம் பெயர் என்ன என கேட்டார் முகமத் என்றான் இன்னும் சில முகமத் உள்ளனர் நான் முகமத் 1 ,2 என அழைப்பேன் என்றார் . அவர்களுக்கு அவசரம் இன்னும் நிறையபேர் வெளியே காத்திருப்பதால் .
 மாலையில் அறைக்கு வந்தோம் .தேர்வு பெற்ற தகவல் இரவில் முடிவாகும் மறுநாள் தொலைபேசியில் சொல்வதாக சொன்னார்கள் .
  மறுநாள் அழைப்புவந்தது தேர்வாகிவிட்டேன் .என்னுடன் நண்பன் கார்த்திக்கும் .அவன் உதவி சமையல்காரன் .மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் அலுவலகம் வாருங்கள் என  அழைத்தனர்.
     எங்களை போல தேர்வாகிய பலர் மருத்துவபரிசோதனைக்கு சென்றோம் .கடவுசீட்டை ராயல் கன்சல்டன்சியில் சமர்பிதிருந்தோம் .எங்கள் அறையை  சார்ந்த செழியனும் தேர்வாகியிருந்தான் .
  மருத்துவபரிசோதனைக்கு பின் தான் தெரிந்தது நாங்கள் இருந்த பகுதியில் இருந்து எங்களுக்கு தெரிந்த ,லோகேஷ் ,செல்வேந்திரன் இன்னும் பலரும் தேர்வாகியிருப்பது .
    ஒருவராத்திற்கு பிறகு அறைக்கு அழைத்து நாளை மறுநாள் பயணம்  அலுவலகம் வந்து விமான சீட்டு,கடவுசீட்டு மற்றும் ஆவணங்களை மறுநாள் வந்து பெற்று செல்ல சொல்லிவிட்டனர் .நான் அன்று ஒரு வேலைக்கு போயிருந்தேன் .
  அறைக்கு வந்ததும் நண்பர்கள் விபரம் கூறினர்.மகிழ்ச்சியுடன் மறுநாள் அலுவலகம் சென்றேன் .நான் .கார்த்திக் ,செழியன் மூவருக்கும் ஆவணங்களை தந்து விட்டு வாழ்க தமிழ் மக்கள் என்றார் .அவருக்கு தமிழில் ஒரு சில வார்த்தைகளே தெரியும் என அப்போது அறிந்தேன்.அவர்கள் பணம் ஏதும் என்னிடம் கேட்கவில்லை , 3500 ருபாய் மருத்துவபரிசோதனைக்கு மட்டும் கட்டினேன் .
     இரவில் குவைத்திற்கு எனது முதல் விமான பயணம் .பெரிதாக எந்த ஏற்பாடுகளும் இல்லை .என்னிடம் இருந்த துணிகளை துவைத்து அடுக்கி கொண்டேன் .புதிதாக ஏதும் வாங்கியதுபோல் நினைவில் இல்லை .மனம் உற்சாகமாக இருந்தது .  இரவில் மும்பையிலிருந்து பயணம் .நண்பர்களிடம் சொல்லிவிட்டு காரில் புறப்பட்டோம் . நான் பலமுறை நண்பர்களை அனுப்பிவைக்கவும் ,அழைத்து செல்லவும்  வந்த மும்பை சத்ரபதி சிவாஜி  வானூர்தி நிலையத்தில் முதல் முறையாக உள்ளே சென்றேன். 2003 ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தியதி என நினைவு .
    அங்கிருந்த குடியுரிமை அதிகாரி ,ஹிந்தியில் ஏன் இப்போது குவைத் செல்கிறாய்,அதுவும் சுற்றுலா விசாவில் என, போர் நடப்பதால் பலரும் குவைத்திலிருந்து தாய் நாட்டுக்கு வந்து கொண்டிருந்த நேரம் அது .குறுகியகால பணிக்கு செல்கிறேன் என்றேன் .என் கடவுசீட்டை  பார்த்தவர் அடுத்த கேள்வியை தமிழில் கேட்டார் .மணவாளகுறிச்சி மார்த்தாண்டாத்திலிருந்து(அந்த ஊரின் பழைய பெயர் தொடுவட்டி) எவ்வளவு தூரம் .முப்பது கிலோமீட்டர் சார் .என் கடவுசீட்டில் முதல் முத்திரையை பதித்தார் . departure என .

    அலுவலகத்தில் சந்தித்த பலரை விமானம் ஏறுவதற்கு முன்பே பார்த்தோம் .நண்பன் கார்த்திக் முன்பு ஒருமுறை சிங்கப்பூர் போய் வந்திருந்தான் .அதனால் அனைத்தையும் எளிதாக கடந்து சென்றோம்.கார்த்திக்கிற்கு எதோ வயிற்று கோளாறு இரண்டு முறை கழிவறை போய்விட்டு வந்துதான் விமானம் ஏறினான் .நள்ளிரவில் கல்ப் ஏர் விமானம் மும்பை கடலுக்கு மேலே பறக்க தொடங்கியது.உற்சாகமான முதல் விமான பயணம்.அந்த விமான இருக்கை அட்டையை (boarding pass)என்னை போல் நிறையபேர் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்திருந்தனர் .
    கடந்த ஜுன் 3 தியதி தற்போது இருக்கும் கப்பலுக்கு வருவதற்காக கொச்சி -இலங்கை வழியாக சிங்கப்பூர் வந்தது எனது 7௦ தாவது பயணம் .

4 comments:

  1. எப்படி இத்தனை நுண்ணிய தகவல்களை எல்லம் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? ஆண்டு, தேதி, மாதாம், எந்த நாளிதழ், பேருந்து எண், பேருந்தில் இறங்கி நடக்கையில் இருக்கும் கோவில், நேர்காணலில் இருந்த அதிகாரிகள் அவர்களின் நாடு, அதில் ஒருவரின் பெயர் இந்த வேலைக்கு போகசொன்ன நண்பனின் பெயர் , உங்கள் அனைவரிடமும் கேட்க்கப்பட்ட கேள்விகள் பதில்கள் முடிவை தெரிந்து கொண்டது, பயணத்திற்கான ஏற்பாடுகள், உற்சாக மனநிலை, எத்தனை செலவாந்து, விமான நிலையம் சென்றது, கடவுச்சீட்டு பரிசோதனை,.......... ஆச்சர்யமாக இருக்கிறது. கூடவே இது திரைக்கதையை போலவும் தோன்றுகிறது. அனுபவங்களை அப்படியே காட்சிப்படுத்திவிடுகிறீர்கள்,
    தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
  2. நன்றி சகோதரி .தொடர்ந்து எழுகிறேன் .நினைவாற்றல் இருக்கிறது என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. iraq....illustratively you said it ..with a right choice of your memory with relevent action of your own steps..
    nice ..pls continue

    ReplyDelete
  4. தொடர்கிறேன்

    ReplyDelete