Thursday 29 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 7


7. குண்டு மழை பொழிந்த பக்குபா  

 அடுமனை மற்றும் உணவுக்கூடம் இணைந்த பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. முகில் கூட்டங்கள் இணைந்திருப்பது போல வெண்ணிறத்தில் நூறு மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும் பனிரெண்டு மீட்டருக்கு மேல் உயரமும் கொண்ட, ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து உணவுண்ணும் வகையில் இருந்தது. அடுமனை தளவாடங்கள் பொருத்துகின்ற  சிறு பணிகள் முடிந்தால் உணவுக்கூடம் முழுமையாக செயல்பாட்டுக்குத் தயாராகிவிடும். அதிகாரிகள் விரைவில் துவங்கும் முனைப்புடனேயே இரவும் பகலும் வேலை செய்து கொண்டிருந்தனர் . நானும் அலமாரிகள் பொருத்தும் பணி முடிந்து,  கூடாரம் அமைக்கும் குழுவினருடன் இணைந்திருந்தேன்

 பக்குபா முகாமிற்கு பணி செய்ய மேலும் எழுபது பேர் கொண்ட குழு,  நான்கு வாகனங்களில் வந்து சேர்ந்தனர். குவைத்தில் என்னுடன் இருந்த வெங்கட்ராமனும் அந்தக் குழுவிலிருந்தான். நிறைய புது முகங்கள். குவைத்தில் எங்களுடன் இருந்து வேறு வேறு இடங்களுக்கு பிரிந்துசென்ற பலரும் வந்திருந்தனர். நான் வெங்கட்ராமனிடம் இங்கே வாயிலில் நகம், முடி எல்லாத்தையும் செக் பண்ணி உள்ள உட ரெண்டு மணிக்கூர் ஆயிருக்குமேஎன்றேன்.  “இல்லை,  எங்களை வழிநடத்தியவர் வாயில் காவல் தலைவனிடம்,  ‘ஆல் இண்டியன்ஸ், டிரஸ்ட் பீப்பிள்என்றதால், கேள்வியே இல்லாம உள்ள விட்டாங்கஎன்றான்.
  
 ஒரு நாள் நண்பன் கார்த்திக் என்னிடம் வந்துநான் திக்ரித் போறேன். இரண்டு பேர் தேவை. அங்கு நீயும் என்னுடன் வா, ரஸ்ஸல் எனக்குப் பதவி உயர்வு தருவதாக உறுதியளித்துள்ளார்என்றான்.

நான் அங்கு வந்தால் எனக்கு என்ன கிடைக்கும்என நான் கேட்டேன்.

உனக்கும் பிறகு பேசி பார்க்கலாம்என்றான் கார்த்திக்.

நான் வரவில்லை என்று உறுதியாக மறுத்துவிட்டேன்.

கடந்த ஒரு மாதமாக இங்கு கஷ்டப்பட்டு கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்தோம். இன்னும் சில நாட்களில் உணவுக்கூடம் முழுமையாக  துவங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்என்றேன்.

இங்கு இவ்வளவு நாட்கள் கொளுத்தும் வெயிலில்,குறைவான வசதிகளுடன் கஷ்டப்பட்டோம்.  நிலைமை சரியாகும் தருவாயில் திக்ரித் வந்து மீண்டும் இதுபோல் சூழ்நிலையை அனுபவிக்க வேண்டாம்”  என எனது தயக்கத்தின் காரணத்தை விளக்கினேன்.

கூடாரம் அமைக்கும் குழு, திக்ரித்தில் உள்ள சதாமின் அரண்மனையில் அடுத்த முகாம் துவங்குவதற்க்காக அங்கு செல்கிறது . அந்தக் குழுவுக்கு சமைக்க ஒரு சமையல்காரரும் ,உதவியாளரும் தேவைப்படுவதால்,  என் விருப்பத்தை கேட்காமலேயே ரஸ்ஸலுடன் ஒத்துகொண்டு வந்து என்னை அழைத்தான். நெருங்கிய நண்பன் என்ற உரிமையில் அவன் எடுத்த முடிவு அது.  பின்பு கார்த்திக் கோவாவைச்  சார்ந்த கைத்தாநோவை தன்னுடன் அழைத்துச்  சென்றான். கடும் தூசு காரணமாக ஒவ்வாமையில் அவதிப்பட்டவர் அவர். பக்குபாவில் தினமும் வெடிக்கும் குண்டுமழை ,சாவின் அருகில் பயத்துடனேயே வாழ்க்கை ,எந்த வினாடியிலும் உயிர் போகும் அபாயம் போன்ற காரணங்காளால் இங்கிருந்து சென்றுவிட நினைத்தவர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் .


இப்போதெல்லாம் இங்கு குண்டு வெடிப்பது அதிகமாகிவிட்டது. மனதளவில் பலர் பாதிக்கப் பட்டிருந்தனர். எங்கள் மேற்பார்வையாளர் ஆந்திராவின் லக்ஷ்மணன் பரிதாபத்திற்கு உரிய வகையில் என் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியம் ஆவதை கண்டேன். லக்ஷ்மண் ஐம்பது  வயதை தாண்டியவர், கரிய நிறமும் ,கொஞ்சம் குண்டான,தொப்பையுடன் கூடிய உடல்வாகும் கொண்டவர் . நல்ல அறிவு முதிர்ச்சியும், ஆங்கில புலைமையும் உள்ளவர் . அவரை அறியாமலேயே அவர் மாறிக்கொண்டிருந்தார். தேவையே இல்லாமல் வணக்கம் சொல்வது, சிரிப்பது, வீண் உரையாடல்கள் என. இருந்தாலும் பெரும்பான்மையான நேரங்களில் இயல்பான மொழியில் நன்றாகவே பேசுவார்.

ஒரு நாள் மாலையில் நான் குளியல் அறைக்குச் சென்றேன்.  அது  ராணுவ வீரர்களுக்கானது எங்களுடைய குளியல் அறை  பயன்பாட்டுக்கு வாராத நேரம் அது.  உள்ளே சென்ற போது தான் தெரிந்தது தண்ணீர் இல்லை என. வெளியே வருவதற்காக திரும்பியபோது உள்ளே தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துவிட்டேன். நான் அவரை அழைத்தேன்லக்ஷ்மண் வாங்க போகலாம்என.  “ஷாகுல்,  நீ போ நான்  குளித்துவிட்டு வருகிறேன்என்றார். ஆடை கூட மாற்றியிருக்கவில்லை அவர் .

என் கண்கள் நிரம்பியது. என்னால் அவரை அங்கு விட்டுவிட்டு வர மனம் இல்லை. என்னுடன் குவைத்திலிருந்து ஒன்றாக வந்தவர். எப்போதும் எனக்கும் பிறருக்கும் மரியாதை தருபவர். அவரது ஆங்கில உச்சரிப்பை பலரும் கிண்டலடிப்பார்கள் . பெரும்பான்மையான ஆந்திராகாரர்கள் அப்படிதான் பேசுவார்கள் போல.  எல்லாவற்றிற்கும் நகைசுவையுடன் பதிலளிப்பார்.

மீண்டும்லக்ஷ்மண் வாங்க போலாம் குளித்தது போதும்என்றேன்.

மணலால் உடல் தேய்த்தார், தண்ணீர் இல்லாமலே மீண்டும் குளித்தார். வெளியே வந்தவர் ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்த்து,  தலை வாரிக்கொண்டார் .

தினமும் குண்டு வெடிப்பதால்,  உயிர் பயத்தில், ஒரு வாரத்தில் ஒருவர் நான் பார்த்துகொண்டிருக்கும்போதே முழு பைத்தியமாக ஆகிவிட்டார். என் கவலை இனி அவரை எப்படி பாதுகாக்க போகிறோம் என்பதுதான் .

உணவுப் பொருட்களுடன் சரக்கு பெட்டக வாகனங்கள் பக்குபா முகாமை வந்தடைந்தன. உணவுக்கூடம் துவங்கும் தியதி அறிவிக்கப்பட்டதும் பெரும்பான்மையான ராணுவ வீரர்கள் உணவுக்கூடத்தை வந்து பார்த்துவிட்டு பூரிப்புடன்   சென்றனர்.

எல்லாம் ஆயத்தமாகி,  அன்று துவங்கியது ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்கும் நாள். முதல் நாள் என்பதால் பல சிறப்பு உணவுகள், மாட்டிறைச்சியின் முதுகெலும்பு பகுதியில்  வெட்டிய  டிபோன் ஸ்டேக்,  வினிகர், வோய்செய்ஸ்டர் சாஸ், ஹச் பி சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையில் பனிரெண்டு மணிநேரம் ஊற வைத்து குறைவான எண்ணையில் பொரித்ததுஉப்பும் மிளகுத்தூளும் கலந்து ஆவியில் வேகவைத்த கிங் கிராப்,இறால்,லாப்ஸ்டர், இத்தாலியன் சாஸேஜ், வெள்ளை சாதம், அலுமினியத் தாளில் பொதிந்து ஆவியில் வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்து உலர்த்தி தூளாக்கப்பட்ட உருளைக்கிழங்கில் தண்ணீரும்,வெண்ணையும்,உப்பும் சேர்த்து வேகவைத்த மாஸ்பொட்டட்டோ ,உருளைக்கிழங்கை குச்சிகளாக வெட்டி எண்ணையில் பொரித்த பிரெஞ்ச் பிரைஸ்,முக்கோணவடிவில் வெட்டி எண்ணையில் பொரித்த பொட்டடோ வெட்ஜெஸ், சிக்கன் பார்பெக்யூ விங்க்ஸ் எனும் கோழியின் இறக்கைகள். வெட்டிய மீன்துண்டுகளில்  உப்பு,மிளகுத்தூள் தூவி ஆவியில் வேகவைத்து அதன் மேல் மெல்லிதாக வெட்டப்பட்ட எலுமிச்சை துண்டுகளுடன் இருந்த கேட்பிஷ்,    துண்டுகளாக நறுக்கிய காரட்,பீன்ஸ்,காலிபிளவர்,உதிர்த்த சோளம் சேர்த்து அவித்த மிக்ஸ் வெஜிடபிள்,மையோனஸ் தடவிய பன்களின் இடையில் வெட்டிய வெங்காயம்,வெள்ளரிக்காய்,லெட்டுஸ் வைத்த பர்கர்கள் .

 மெல்லியதாக நறுக்கிய போர்க் பேகான் எனும் பன்றியின் ஊன் துண்டுகள் கலந்தவெஜிடபிள்சூப்,டோமொட்டோசூப், ஆப்பிள், ஆரஞ்ச், பீச், மாங்கோ, பைனாப்பிள், ப்ளூபெரி போன்ற வகைகளில் பழசாறுகளும், மிக அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு பின் குளிரவைத்து பாக்கெட்டுக்குள் அடைத்த பால் வகைகள். வட்டமாக பழவகைகளை அடுக்கிவைக்கபட்டிருந்த மேஜையில் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்ச், கிவி பழம், வெள்ளை மற்றும் கருப்பு திராட்சை, பேரிக்காய், சீமை பேரிக்காய், வெட்டிய தர்பூசணிகள் இருந்தன .

ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்திக் கொண்டிருந்தனர்.  இன்னும் பெருங்கூட்டம் வந்து கொண்டே இருந்தது. இன்று முதல்,  தினமும் சூடான, அவர்கள் விரும்பும் உணவை சுவைக்கும் சந்தோசம் அவர்கள் அனைவரது முகத்திலும் தெரிந்தது. முகாமுக்கு வெளியே உள்ள ராணுவ மையங்களில் இருந்து உணவை எடுத்துச்  செல்லவும் நீண்ட வரிசை நின்றுகொண்டிருந்தது. எனது மேற்பார்வையாளர் ரோகன் என்னிடம்ஷாகுல்,  நீ போய் அவர்களுக்கான உணவை அடைத்துக் கொடுஎன ஒரு பட்டியலை என்னிடம் தந்தான். “அங்க இருக்கவனுக்கு இத்தனை பேரை சமாளிக்க முடியல ப்ளீஸ்என்றான் .

 குவைத்தில் இருக்கும்போதே இருபது பேர் கொண்ட குழுவிற்கு கொடுக்கவேண்டிய உணவின் அளவுகளை பழகியிருந்தேன். நான் கொடுக்கும் உணவுகள் அதிகம் வீணாகாமலும், பற்றாக்குறை இன்றியும் இருப்பதாக ராணுவ வீரர்கள் ரோகனிடம் சொல்லியிருந்தனர். இருபது பேருக்கு என்றால் இரண்டு பேர் அதிகமாக சாப்பிடும் அளவில் எப்போதும் உணவை வழங்குவேன்.

 நான் வந்த அரைமணிநேரத்தில் நீண்டவரிசை குறைந்து பத்து பேர் மட்டுமே என் முன்னால் நின்று கொண்டிருந்தனர். ஏற்கனவே அறிமுகம் ஆன பலரும் இன்முகத்துடன் நன்றி கூறி உணவை வாங்கி சென்றனர் .

அப்போது கையில் உணவுடன் வந்த முனாவர்ஷாகுல்,  வா சாப்பிடப் போகலாம்என அழைத்தான்.  அவனுக்குப் பிடித்த இறாலும், டி போன் ஸ்டேக்கும் அந்த தட்டில் இருந்தது. “முனாவர்,  இங்க பாரு , இத்தனை பேரு என் முன்னால நிக்கானுவோ,  பாவம் அனுப்பி உட்டுட்டு வாறேன்.  நீ போய் சாப்புடுஎன அனுப்பிவைத்தேன். “சீக்கிரம் வா என்று சொல்லிவிட்டு முனாவர் சென்றான். மணி  இரண்டை நெருங்கியிருந்தது. என் கட்டிலின் அருகில் குளிரூட்டி இருப்பதால் இடைவெளி நிறைய இருந்தது. முனாவர் அங்கு தான் ஐவேளை தொழுகையையும் நிறைவேற்ற வந்து செல்வான். அதனால் அவனுடன் நல்ல பழக்கம் எனக்கு .

முனாவர் சென்ற இரண்டு  நிமிடத்தில் சராமரியாக எங்கள் கூடாரங்களின் அருகில் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தது. ராணுவ வீரர்கள் உடனே தரையில் படுத்துக் கொண்டனர். நாங்களும் தான். பலரும் சிதறி ஓடினர். நானும் வெளியே ஓடினேன். அருகில் இருந்த பங்கர் சுவற்றுக்குள் போய் பதுங்கிக் கொண்டேன் . சில நிமிடங்கள் குண்டு மழை தொடர்ந்தது .

லக்ஷ்மண் எதையும் உணராதவராய் பங்கர் அருகில் இருந்த உயரமான மணல் மூட்டைகளின் மேல் என் டி ஆர் பாட்டுப் பாடி கைவீசி நடந்து கொண்டிருந்ததை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எங்களுடன் இருந்த ராணுவ வீராங்கனை ஒருத்தி தேம்பி, தேம்பி அழுதுகொண்டிருந்தாள். இருபது வயதை பூர்த்தியடையாத இளம் மங்கை அவள். ராணுவத்தில் இருந்தாலும் உயிர் பயம் எல்லோரையும் போலத்தான் தானே. அவளை நாங்கள் சமாதனப்படுத்தினோம் .

 பின்பு தான் தெரிந்தது முனாவர் கையில் உணவுடன் எங்கள் குடியிருப்பு கூடார வாயிலை நெருங்கியபோது அவனருகிலேயே குண்டு விழுந்ததால் மிக ஆபத்தான நிலையில் அவன் இருப்பதாக சொன்னார்கள். இரண்டு  நிமிடங்களுக்கு முன் என்னை சாப்பிட வா என நட்புடன் அழைத்தவன். சந்தோஷ் எனும் மங்களூர் நண்பன் இரு கால்களும் தொடைமுதல் பாதம் வரை பாண்டேஜ் ஆல் சுற்றப்பட்டு தூக்கி வந்தார்கள். பலருக்கு காயம். எங்கள் முகாமில் இருந்த ராணுவ முதலுதவி மையத்தில் முதலுதவி மட்டும் அளித்தனர் .

தாமதமாக வந்த நிறைய வீரர்கள் முதல் நாள் உணவைக்கூட சுவைக்க இயலவில்லை. உணவுக்கூடம் துவங்கிய சில மணிநேரங்களிலேயே தாக்குதலுக்கு உள்ளானது .


-        ஷாகுல் ஹமீது

28 -09-2016

9 comments:

  1. மகிழ்ச்சி!!!நீண்ட நெடிய பயணத்தில் உனக்கும்..எனக்கும். ..தொடர்ந்து படித்து வருபவர்களுக்கும்...

    ReplyDelete
  2. நன்றி தம்பி தொடர்ந்து வாசிப்பதற்கு

    ReplyDelete
  3. ஷாகுல் குண்டு வெடிப்பும் மனநினலை பிறழ்ந்தவர்களின் அவஸ்தையுமானதோர் இடத்தில் இருந்து பசுமையும் குளிர்ச்சியுமாக நதிக்க்ரையின் அருகில் ஒரு வாழ்வு. படிக்கும் எங்களுக்கும் மனது குதூகலிக்கிறது. ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல புனைவை மிஞ்சும் மர்மங்களும் சாத்தியங்களும் உள்ளது வாழ்வு என்பதை உங்கள் அனைத்துப்பதிவுகளும் சொல்கின்றன.வண்டி எடுக்கசொன்னாலும் தெர்யாவிட்டாலும் எடுக்கிரீர்கள், ஸ்டோர் வேலை தெரியாமலேயே தெரியுமெனெ சொல்லி அங்கு செல்கிறீர்கள். இதுதான் உங்களின் தனித்தன்மை. எலலா அசாதாரண் சந்தர்ப்பங்களயும் முயன்றுவிடுகிறீர்கள், அதில் ஒன்றியும் விடுகிறீர்கள்
    தினமும் நாட்குறிப்பு எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். இல்லைஎனில் எப்படி இத்தனை நுண்ணிய தகவல்களை எல்லாம் எழுத முடிகிறது இத்தனை நாட்களுக்குப்பின்னும்? எழுதி முடித்தபின் ஒரு புத்தகமாக கொண்டுவந்துவிடுங்கள் தம்பி

    ReplyDelete
  4. உங்கள் ஈராக் பதிவு அருமை.படிக்க படிக்க வியப்பாக இருக்கிறது.இவ்வளவு கடினமான அனுபவங்களையும் இலகுவாக எதிர்கொண்டுள்ளீர்கள்.அருமை!!!பதிவுகள் தொடரட்டும்...மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. சகிலா தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி

    ReplyDelete
  6. திரைகடலாடி திரவியம் தேடிய பதிவுகள் அரிதான எழுத்து

    ReplyDelete
  7. திரைகடலாடி திரவியம் தேடிய பதிவுகள் அரிதான எழுத்து

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான நாட்கள்

    ReplyDelete