Sunday, 25 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 5


குண்டு மழை பொழிந்த பக்குபா        
 தூசு மிகுந்த பக்குபாவில் எங்கள் முகாமை நோக்கி தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தது . இப்போதெல்லாம் இரவில் குண்டு வெடிக்கும்போது  கார்த்திக் பங்கர் பாதுகாப்பு சுவருக்கு வருவதே இல்லை .
    இங்கு வந்த பத்து நாட்களுக்குள் பாதிபேர் இங்கு வேலை செய்ய முடியாது .உயிருக்கு உத்திரவாதமிலாத இந்த வேலை எங்களுக்கு தேவையில்லை எங்களை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள் என முறையிட்டனர் .வேலைக்கு வரவும் மறுத்து விட்டனர் .
   அடுத்த சில நாட்களில் அவர்களை முகாமிலிருந்து அழைத்து சென்றனர் குவைத்திலிருந்து இந்தியா அனுப்பி வைப்பதாக அழைத்து சென்றனர் .
   எங்களுக்கு குளிக்கவும் ,மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் வெளியிலிருந்து தான் வரவேண்டும் .சில பாதுகாப்பு காரணக்களுக்காக  ராணுவம் முகாமை விட்டு வெளியே செல்லவே இல்லை தண்ணீர் எடுத்து வர .பனிரெண்டு நாட்கள் நான் என் வாழ்வில் குளிக்காமல் இருந்ததும் அங்கேதான் .நல்ல வேளையாக குடிநீர் போத்தல்கள் மட்டும் தேவைக்கு அதிமாக இருந்தது .
   குளிரூட்டி வசதியுடைய கூடாரத்திற்குள்  நான் தகர அலமாரி செய்து கொண்டிருந்தேன். சட்டை அணிவதே இல்லை அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்து வெற்றுடலுடன் பணி செய்வேன் .இப்போது நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 வரை செய்ய தொடக்கி விட்டேன் . ஆடைகளை துவைக்கவும் முடியாது .
   ஜட்டி எல்லாம் அலசாம போடமுடியாது .முணு நாளா ஒரே ஜட்டி தான் போட்டுருக்கேன் எல்லாம் அழுக்காயாச்சி  போய் கேப்போம் வா என மேற்பார்வையாளர் ரோகனுடன் சென்றோம் .
  உள்ளாடைகளை துவைக்காமல் அணிய முடியாது என ரஸ்ஸலிடம் கேட்டோம் .ஆளுக்கு 3 போத்தேல் குடிநீர் தந்தார் உள்ளாடை மட்டும் துவைக்க .பக்கட் கிடையாது .தண்ணீர் போத்தல் வரும் அட்டை பெட்டியில் பாலிதீன் பையை போட்டு அதில் துவைத்தோம் .
  கழிப்பறையை  சுத்தம் செய்ய வண்டியும் 12 நாட்கள் வரவில்லை.எல்லோரும் பேப்பர் உபயோகிப்பதால் நிரம்பி வழியும் தருவாயில் நிலைமை சரியானாதால் தப்பித்தோம் .
   உடன் வேலைசெய்த மங்களூர்காரர் நான் இன்னைக்கு பாட்டிலால் குத்தி அமுக்கிட்டாக்கும் காலத்த போனது என்றார். நல்ல வேளையாக மறுநாள் சுத்தம் செய்யும் வண்டி வந்தது .
  ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்வார்கள் .வாரத்தில் 3 நாட்கள் மலத்தை அள்ளி வெளியே வைத்து தீயில் எரிப்பதை பார்த்திருக்கிறேன் .சிலநேரம் அழகிய இளம்பெண்கள் அந்த பணியை செய்வதுண்டு .
  குளிப்பதற்கு கொஞ்சம் தடிமனான ஈரமான (wet tissue peper ) பேப்பேர்கள் தான் அவர்களுக்கு .காற்று புகாத பையில் அடைத்து வைத்திருக்கும் .இரண்டு கைக்கும் 2,கால்களுக்கு ஒன்று கழுத்து முதல் இடுப்பு வரை ஒன்று இடுப்புக்கு கீழ் பகுதிக்கு ஒன்று  அதுதான் ஒரு நல்ல குளியல் .
  
    ஜூலை நான்காம் தியதி அமெரிக்க சுதந்திரதினம் அன்று அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றனர் .எங்களிடம் பெரிதாக எந்த வசதியும் இல்லை குறைந்தது இரண்டாயிரம் உணவு தயார் செய்யவேண்டும் .
   இரண்டு மூன்று மின்சார அடுப்புகள் மட்டும் கிடைத்தது .பொருட்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளை ,குளிர்சாதன பெட்டியாக பயன்படுத்தினோம் .மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஜூலை நாலாம் தியதி இரண்டாயிரம் பேருக்கு ஒருவேளை உணவு கொடுத்து அவர்களை மகிழ்வித்தோம் .
     பணி செய்ய மேலும் நிறையபேர் வந்து விட்டனர் .குவைத்தில் என்னுடன் இருந்த வெங்கட்ராமன் வந்து சேர்ந்தான் .நிறைய புது முகங்கள் குவைத்தில் எங்களுடன் இருந்து வேறு வேறு இடங்களுக்கு பிரிந்துசென்ற பலரும் வந்திருந்தனர் .
   உணவு கூடாரம் பணி முடிந்துவிட்டது .இன்னும் சிறு பணிகள் முடித்தால் உணவுக்கூடம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் .அதிகாரிகள் விரைவில் துவங்கும் முனைப்புடனேயே வேலை செய்து கொண்டிருந்தனர் .
   ஒரு நாள் கார்த்திக் என்னிடம் வந்து நான் திக்ரித் போறேன் 2 பேர் தேவை அங்கு நீயும் என்னுடன் வா என்றான் .
 ரஸ்ஸலுடன்பேசி விட்டேன் எனக்கு பதவி உயர்வு தருவதாக உறுதியளித்துள்ளான் என்றான் .நான் அங்கு வந்தால் எனக்கு என்ன கிடைக்கும் என கேட்டேன் உனக்கும் பிறகு பேசி பார்க்கலாம் என்றான் .
  நான் வரவில்லை என்றேன் .கடந்த ஒரு மாதமாக இங்கு கஷ்டப்பட்டு கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்தோம் இன்னும் சில நாட்களில் முழுமையாக வேலை துவங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றேன் . கூடாரம் அமைக்கும் குழு இப்போதுதான் அங்கு செல்கிறது நான் வரவில்லை என்றேன் .
   கூடாரம் அமைக்கும் குழு திக்ரித் சதாம் அரண்மனையில் அடுத்த முகாம் துவங்குவதற்க்கான அங்கு செல்கிறது .அந்த குழுவுக்கு சமைக்க ஒரு சமையல்காரரும் ,உதவியாளரும் தேவைப்படுவதால் என் விருப்பத்தை கேட்காமலேயே ரஸ்ஸலுடன் ஒத்துகொண்டு வந்து என்னை அழைத்தான்.நெருங்கிய நண்பன் என்ற உரிமையில் அவன் எடுத்த முடிவு அது.
  பின்பு கார்த்திக் வேறு ஒருவரை அழைத்து சென்றார் .கடும் தூசு காரணமாக ஒவ்வாமையில் அவதிப்பட்டவர் அவர்,பக்குபாவில் தினமும் வெடிக்கும் குண்டுமழை ,சாவின் அருகில் பயத்துடனேயே வாழ்க்கை போன்ற காரணங்காளால் இங்கிருந்து சென்றுவிட நினைத்தவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார் .
  இப்போதெல்லாம் இங்கு குண்டு வெடிப்பது அதிகமாகிவிட்டது .மனதளவில் பலர் பாதிக்க பட்டிருந்தனர் .எங்கள் மேற்பார்வையாளர் ஆந்திராவின் லக்ஷ்மணன் பரிதாபத்திற்க்கு உரிய வகையில் என் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியம் ஆவதை கண்டேன் .50 வயதை தாண்டியவர் நல்ல அறிவு முதிர்ச்சியும் ,ஆங்கில புலைமையும் உள்ளவர் .
    தேவையே இல்லாமல் வணக்கம் சொல்வது ,சிரிப்பது உரையாடல்கள் என.இருந்தாலும் பெரும்பான்மையான நேரங்களில் இயல்பான மொழியில் நன்றாகவே பேசுவார் .ஒரு நாள் மாலையில் குளியல் அறைக்கு சென்றேன் அது  ராணுவ வீரர்களுக்கானது எங்களுடைய குளியல் அறை இன்னும் பயன்பாட்டுக்கு வாராத நேரம் அது .
  உள்ளே சென்ற போது தான் தெரிந்தது தண்ணீர் இல்லை என .அப்போதுதான் கவனித்தேன் உள்ளே தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துகொண்டிருந்தார் .அவரை அழைத்தேன் ஷாகுல் நீ போ குளித்துவிட்டு வருகிறேன் என்றார் .ஆடை கூட மாற்றியிருக்கவில்லை அவர் .
  என் கண்கள் நிரம்பியது .என்னால் அவரை அங்கு விட்டு வர மனம் இல்லை .என்னுடன் குவைத்திலிருந்து ஒன்றாக வந்தவர் .எப்போதும் எனக்கும் பிறருக்கும் மரியாதை தருபவர் .அவரது ஆங்கில உச்சரிப்பை பலரும் கிண்டலடிப்பார்கள் .பெரும்பான்மையான ஆந்திராகாரர்கள் அப்படிதான் பேசுவார்கள் போல . எல்லாவற்றிற்க்கும் நகைசுவையுடன் பதிலளிப்பார்.
    லக்ஷ்மண் வாங்க போலாம் குளித்து போதும் என்றேன் மணலால் உடல் தேய்த்தார் தண்ணீர் இல்லாமலே மீண்டும் குளித்தார் ,வெளியே வந்தவர் ஆளுயர கண்ணாடியில் முகம் பார்த்து தலை வாரிக்கொண்டார் .
   தினமும் குண்டு வெடிப்பதால் உயிர் பயத்தில் ஒரு வாரத்தில் ஒருவர் நான் பார்த்துகொண்டிருக்கும்போது  முழு பைத்தியமாக ஆகிவிட்டார்.என் கவலை இனி அவரை எப்படி பாதுகாக்க போகிறோம் என்றுதான் .
   எல்லாம் ஆயத்தமாகி அன்று துவங்கியது ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்கும் நான் .முதல் நாள் என்பதால் பல சிறப்பு உணவுகள் ,டி போன் ஸ்டேக் ,கிங் கிராப் ,இறால்,லாப்ஸ்டர்  என அமர்களபடுத்தினர் .
  ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்தி கொண்டிருந்தனர் .இன்னும் பெருங்கூட்டம் வந்து கொண்டே இருந்தது .முகாமுக்கு வெளியே உள்ள ராணுவ மையங்களில் இருந்து உணவை எடுத்த செல்லவும் நீண்ட வரிசை .ரோகன் என்னிடம் ஷாகுல் நீ போய் அவர்களுக்கான உணவை அடைத்து கொடு என ஒரு பட்டியலை என்னிடம் தந்தான் .அங்க இருக்கவனுக்கு இத்தனை பேரை சமாளிக்க முடியல ப்ளீஸ் என்றான் .
     நான் வந்த அரைமணிநேரத்தில் நீண்டவரிசை குறைந்து பத்து பேர் மட்டுமே என் முன்னால் நின்று கொண்டிருந்தனர் .
   அப்போது கையில் உணவுடன் வந்த முனாவர் ஷாகுல் வா சாப்பிட போகலாம் என அழைத்தான். அவனுக்கு பிடித்த இறாலும்,டி போன் ஸ்டேக் கும் அந்த தட்டில் இருந்தது.முனாவர் இங்க பாரு இத்தனை பேரு என் முன்னால நிக்கானுவோ பாவம் அனுப்பி உட்டுட்டு வாறேன் நீ போய் சாப்புடு என அனுப்பிவைத்தேன் . மணி 2 ஐ நெருங்கியிருந்தது .என் கட்டிலின் அருகில் குளிரூட்டி இருப்பதால் இடைவெளி நிறைய இருக்கும் .முனாவர் அங்கு தான் தொழுகைக்கு வருவான் .அதனால் அவனுடன் நல்ல பழக்கம் எனக்கு .
     அடுத்த 2 நிமிடத்தில் சாராமரியாக எங்கள் கூடாரங்களின் அருகில் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தது வீரர்கள் உடனே தரையில் படுத்து கொண்டனர் நாங்களும் தான் .பலரும் சிதறி ஓடினர்.நானும் வெளியே ஓடினேன் அருகில் இருந்த பங்கர் சுவற்றுக்குள் போய் பதுங்கி கொண்டேன் .
  லக்ஷ்மண் எதையும் உணாராதவராய் பங்கர் அருகில் இருந்த உயரமான மணல் மூட்டைகளின் மேல் என் டி ஆர் பாட்டு பாடி கைவீசி நடந்து கொண்டிருந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது .எங்களுடன் இருந்த ராணுவ வீராங்கனை ஒருத்தி தேம்பி ,தேம்பி அழுதுகொண்டிருந்தாள் இருபது வயதை பூர்த்தியடையாத இளம் மங்கை அவள் .
   ராணுவத்தில் இருந்தாலும் உயிர் பயம் எல்லோரையும் போலத்தான் தானே .அவளை நாங்கள் சமாதன படுத்தினோம் .
   பின்பு தான் தெரிந்தது முனாவர் கையில் உணவுடன் எங்கள் குடியிருப்பு வாயிலை நெருங்கியபோது அவனருகிலேயே குண்டு விழுந்ததால் மிக ஆபத்தான நிலையில் அவன் இருப்பதாக சொன்னார்கள்.2 நிமிடங்களுக்கு முன் என்னை சாப்பிட வா என நட்புடன் அழைத்தவன்.

    சந்தோஷ் இரு கால்களும் தொடைமுதல் பாதம் வரை பாண்டேஜ் ஆல் சுற்றப்பட்டு தூக்கி வந்தார்கள் .பலருக்கு காயம் எங்கள் முகாமில் இருந்த ராணுவ முதலுதவி மையத்தில் முதலுதவி மட்டும் அழைத்தனர் .
ஷாகுல் ஹமீது 
25-09-2016

2 comments:

  1. தம்பி ஏன் படிச்சோம்னு ஆயிருச்சு. இந்த பதிவு. கண்ணெல்லாம் நிறஞ்சுருச்சு. எத்தனை கஷ்டங்கள்? ஏன் இப்படி சிரமப்பட்டு அங்கே இருந்தீங்க? என்ன அப்படி அவசியம்? எழுத்தில் எழுதினதும் நாங்க புரிஞசுகிட்டதுமே இத்தனை கலங்கடிப்பவை என்றால் நிஜம் எப்படி இருந்திருக்கும்? why you took this much dangerous work in that very young stage of your life?
    these are not just "experiences" but near to death experience
    அந்த குண்டு வெடிப்புகள் குளிக்க துவைக்க உடை மாற்ற கூட வழியில்லா நிலைமைகளைவிட மனம் பேதலித்த அந்த ஆந்திரா லக்‌ஷ்மனன் தான் மனதில் அப்படியே பதிந்து விட்டார். எப்போதும் எது வாசித்தாலும் தருணிடம் சொல்லும் நான் இதை சொல்லவில்லை. அவன் இதை நினைத்து மிக வருந்திவிடுவான் என்று. முனாவருகும் லக்‌ஷ்மனனுகும் என்ன ஆச்சுன்னு சீக்கிறம் எழுதுங்க

    ReplyDelete