Friday, 23 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 4

பாக்தாத்தில்
      காலையில்   ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன நாங்களும் இணைந்து கொண்டோம் .மாலையில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத் ஐ அடைந்தோம் .
  பாக்தாத்தின் விமான நிலையமும் அமெரிக்க படையின் கட்டுபாட்டில்தான்,ஆனால் விமான நிலையம் இயங்கவில்லை .இன்றிரவு இங்கு தங்கிவிட்டு காலையில் புறப்புடுவோம் அருகில் தான் பக்குபா என்றனர் .
  மாலையில் அமெரிக்கர்களின் ரக்பி பந்து ஒன்று கிடைத்தது .இருட்டும் வரை மகிழ்ச்சியாக விளையாடினோம் .
  நானும் நண்பன் ஒருவனும் இரவில் எங்களுடைய பேருந்தின் மேல் படுத்துகொண்டோம் .நள்ளிரவு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது .பயத்தில்  எழுந்து அதிர்ச்சியுடன் கீழே இறங்கினோம் .பின்பு பேருந்துனுள் அமரும்படி வேண்டினர் .அது தான் முதல் குண்டு வெடிக்கும் சப்தம். அப்போது தெரியவில்லை தினமும் அருகிலேயே பொழியும் குண்டு மழையில் தான் இனி நாட்கள் கழிய போகிறது என .
   ஒருவன் கேட்டான் பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்ய என யாரிடமும் பதில் இல்லை .நெடுநேரத்திற்கு பின் எப்போதோ தூங்கியிருப்பேன் .காலையில் எழுந்தபோது .கொஞ்சம் பிரட்டும் பாலும் கிடைத்தது சாப்பிட .காலை பத்துமணிக்கு மேல் தான் எங்களுடைய வாகனம் புறப்பட்டது .பாதுகாப்புக்கு வந்த ராணுவ வாகனங்கள் எல்லாம் சென்று விட்டது .எங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு ஜீப் மட்டும் வழிகாட்ட அதை பின் தொடர்ந்து சென்றோம் .பாக்தாத் சாலைகள் நல்ல நீள அகலமாகவே இருந்தது நீண்ட நாள் பாராமரிக்க படவில்லை .ஒற்றை கழுதை வண்டி ஒன்று பார்த்தேன்  அந்த சாலையில் .தொடர் போர்களினால் பாதிக்க பட்டதின் விளைவு .இல்லையெனில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஈராக் .11 ஆண்டுகள் இரானுடன் போர் .பின் 1991 ம் ஆண்டில் குவைத் எனது மாநிலம் என சதாம் படைகளை அனுப்பி பிடிக்க.மீண்டும் போர் .அமெரிக்க படைகளை அனுப்பி குவைத்தை மீட்டது .
  இப்போது மீண்டும் போர் .
  சதாமின் பிரமாண்ட சிலை உடைக்கபட்டிருந்த இடத்தையும் பார்த்தேன்.எங்கள் வாகனத்தில் அனைவரும் கொஞ்சம் பயத்துடன்தான் இருந்தனர்.மதியத்திற்குள் பக்குபாவை அடைந்தோம் .
  வாயிலில் எங்கள் அனைவரின் உடமைகளையும் பயணபைகளை ஏற்றிவந்த வண்டியிலிருந்து இறக்கி ஒன்று விடாமல் சோதனை செய்தனர் .ஒரு சிலரிடமே செல் போன்கள் இருந்தது .அதை வாங்கி வைத்து கொண்டனர் .என்னிடம் குவைத் முகாமில் அமெரிக்க அதிகாரி அன்பளிப்பாகக் தந்த வளைந்த,கைபிடியுடன் கூடிய போர்கத்தி  இருந்தது .அதையும் அனுமதிக்கவில்லை .
   நகம் முடி என அனைத்தையும் சோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர் .பக்குபா ஈராக்கின் ராணுவ மையமாக இருந்திருக்கிறது .ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்கவும் ,மேலும் பல வசதிகளும் இருந்திருக்கும் .அவைகளை பயன்படுத்தி கொள்ளவே அமரிக்கா அங்கே ஒரு முகாமை அமைத்திருந்தது .
  பக்குபாவின் மணல் பெரும் தூசு படலம் .காலை தரையில் வைத்தால் ஒரு அங்குலத்திற்கு மேல் பதியும் .வாகனங்கள் அருகில் சென்றால் தூசு படலம் காரணமாக குறைந்தது 1 நிமிடம் எதிரில் எதுவும் தெரியாது .
    எங்களுக்கு குடியிருப்பு கூடாரம் மட்டுமே இருந்தது .உணவு கூடம் இன்னும் தயாராகவில்லை .
  நாங்கள் இருபது பேர் மட்டுமே இருந்தோம் .எங்களுக்கு இரவுணவாக சாதமும்,கோழி குழம்பும் தயார் செய்தனர் .சமைப்பதை அறிந்து இரு ராணுவ வீரர்கள் எங்களிடம் வந்து ஓரமாக ஒதுங்கியே நின்றுகொண்டிருந்தனர் .உணவு தயாரானதும் முதலில் அவர்களை அழைத்து உணவை கொடுத்தோம்.
    நன்றி என பலமுறை சொன்ன பின் உணவை வாங்கி சென்றனர் .நாம் சாப்பிடும் அந்த காரம் அவர்களால் சாப்பிடவே இயலாது .தட்டு நிறைய சோறு சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்கில்லை ,நீண்ட நாட்கள் பையில் அடைத்த காய்ந்த உணவை சாப்பிட்டு நாக்கு செத்து போனவர்களுக்கு .சூடாக புத்தம் புதிதாக கிடைக்கும் உணவு அமிர்தம் தானே.பசியுடன் இருப்பவர்களுக்கு முதல் தேவை உணவுதானே.அன்று அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருக்கலாம் .மறுநாள் முதல் தினமும் இரவில் மூன்று அல்லது நான்கு பேர் வந்தனர் .
  அன்றிரவு நாங்களும் இருநாட்களுக்கு பிறகு சாப்பிட்ட நிறைவை உணர்ந்தோம் . குளீருட்டி வசதி செய்யப்பட்ட கூடாரம் .நான்கு குளிரூட்டிகள்.அந்த கூடாரத்தில் செங்குத்தாக 6 அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தது .குளிரூட்டிக்கு அருகில் இருந்த கட்டில்கள் நிறைய இடைவெளி இருந்ததால் நானும் கார்த்திக்கும் அதனருகில் உள்ள இரு கட்டில்களை தேர்வு செய்தோம் .
  இங்கே குளிப்பதற்கு ராணுவ வீரர்களுக்கான குளியல் அறைக்கு தான் செல்லவேண்டும் .உள்ளே சென்றால் முதல் அறையில் துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு வின் உள் அறைகளில் சென்று குளிக்க வேண்டும் .குளியலறைக்கு கதவோ ,திரை சீலையோ இல்லை .
    உள்ளே  போன ஒருவன் என்னப்பா இது குளிக்க போனா எதுதாப்புல ஒருத்தன் துணி இல்லாம குளிக்கான் அவன பாத்துட்டுதான் குளிக்க வேண்டியிருக்கு .
   நீ அந்த கறுப்பனுக்க மின்ன நின்னா குளிச்சா .ராத்திரி காய்ச்சல் மாத்திரை போட்டுக்கிட்டு படு என்றான் மணிகண்டன் .
  வீராங்கனைகளின் குளியலறையும் அருகருகில் தான் .
      மறுநாள் காலை   ஒரு கூட்டம் அறிமுக உரைதான் .தினமும் கூட்டம் நடத்தாமல் எந்த வேலையையும் அவர்கள் துவங்குவதில்லை .தவறுகளும்,புரிந்துகொள்ளாமையும் (miss  understanding )பெரும்பாலும் தவிர்க்கபடுகிறது அதனால் .
    இங்கிலாந்தின் ரஸ்ஸல் தான் எங்களுக்கு அதிகாரி (project manager)இங்கே உணவு  கூடத்திற்கான பெரிய கூடாரம் தயாராகும் வரை நாம் கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்ய வேண்டும் என்றார் .கூடாரம் தயாரானதும் நமது பணிகள் துவங்கும் இங்கு தினமும் ,காலை ,மதியம் ,இரவு என எட்டாயிரம் உணவு வழங்கபட வேண்டியிருக்கும் என்றார் .
   இரு நாட்களுக்கு பின் எங்களுக்கு பொருட்கள் வைக்க தகர (locker)அலமாரிக்கான பாகங்கள் வந்தன .ரஸ்ஸல் எங்கள் அனைவரையும் அழைத்து மொத்தம் நூறு அலமாரிகள் வந்துள்ளன யாருக்காவது இதை ஒன்றிணைக்க தெரியுமா என்றார் .நான் வரைபடத்தை வாங்கி பார்த்தேன் எளிதாக இருந்தது .நான் செய்கிறேன் என்றான் சரி பீட்டர் ஐ உதவிக்கு வைத்துகொள் என்றார் .தங்கும் கூடாரத்திற்குள்ளேயே அதை ஒன்றிணைப்பேன் .
     அதனால் நானும் பீட்டரும் வெயிலில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்திருந்த குழுவிலிருந்து தப்பித்தோம் .முதல் நாள் நான்கு அலமாரிகள் மட்டுமே செய்ய முடிந்தது .

 இரண்டாம் நாள் இரவில் எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது .அனைவரும் ஓடி வெளியே வந்தோம் .கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும்  சுவருக்குள் அனைவரும் சுவருக்குள் சென்று பதுங்கி கொள்வோம்.ஆட்களை எண்ணுவார்கள் பின்பு சிறிது நேரத்திற்கு பின் தூங்க செல்வோம் .பகல் வேளையாக இருந்தால் பேக் டுவொர்க் என்பார்கள் .  இங்கு ஒரு நாளும் நிம்மதியாக தூங்க முடியவில்லை .
ஷாகுல் ஹமீது
24-09-2016

2 comments:

 1. omg என்ன பயங்கர அனுபவங்கள்? எப்படி இத்தனை மன்உறுதியுடன் இது போன்ற சமயங்களில் வீட்டைவிட்டு பிரிந்திருப்பதை நினைதுது வருந்தாமல் புதிய புதிய பணிகளில் உங்களை ஈடுபடுதிக்கொள்கிறீர்கள்?
  முந்திய கேம்பில் பாலையில் விடியலுக்கு முன்பாகவே கால்பந்து விளையாடியதும் இங்கு ரக்பி விளையாடியதும் நல்ல relief ஆகவெ இருந்திருக்கும். எனக்கு படிக்கயில் தவிர்க்க முடியாமல் எப்போதும் தோன்றுவது என்னவென்றால் என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரு போதும் எங்களின் comfort zone -யை விட்டு வெளியே வர சம்மதமே இல்லை. அதனால்தான் இந்த மாதிரியான அனுபவங்கள் எங்களுக்கு இல்லை போலும். வாழ்வது ஒரு முறை அதில் பலவற்றை அனுபவிக்கும் அருள் உங்களைப்போன்ற சிலருக்கே வாய்த்திருக்கிறது. பதிவுகள் மிக அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. பின்னுட்ட்டம் இடுவதில் இருந்த நாட்டம் போய் கதை படிக்கும் சுவரஸ்யம் கூடுவது போல நாளை என்னவாக இருக்கும் எனும் ஆவலே மேலோங்குகிறது தம்பி
  தொடர்ந்து எழுதுங்கள்
  அன்புடன்
  லோகமாதேவி

  ReplyDelete