Wednesday, 21 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் (2)

ஈராக் போர்முனை அனுபவங்கள் .(2) 
அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் .
        நான்குமணி நேர பயணத்திற்கு பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது .11 மணிநேரம் காத்திருப்பு அங்கே .மதிய உணவுக்கான கூப்பன்களை விமான நிறுவன அழகான பெண் ஒருத்தி தந்தாள். முகம் மட்டும் தெரியும் வகையில் உடையணிந்த இஸ்லாமிய பெண் அவள்.
  பஹ்ரைன் பரபரப்பிலாத விமான நிலையம் .நாங்கள் மாலைவரை அங்கேயே உட்கார்ந்தும் ,படுத்தும் தூங்கியும் நேரத்தை கடத்தினோம் .மாலை மீண்டும் அறிவித்தார்கள் .விமானம் மேலும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது தேனீர் தருகிறோம்  வாருங்கள் என .ஒரு நாளில் 12மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருப்பு பெரும் அவஸ்தை .
  2008 ஒருமுறை நியூயார்க் ல் 11மணிநேரமும் , 2013 ல் ஹுஸ்டன் விமான நிலையத்தில் 12 மணிநேரமும் அந்த அவஸ்தை கிடக்கபெற்றேன்.
   இரவில் நாங்கள் குவைத் விமான நிலையம் வந்து இறங்கினோம் .E S S  என்ற தொப்பியணிந்த குமார் எனும் மலையாளி  எங்களுக்காக காத்திருந்தார்.
  நாங்கள் இருபதுபேர் .எங்கள் பைகளுடன் வாகனத்தில் ஏறிகொண்டோம்.2 மணி நேர பயணம் என நினைக்கிறன் .ஈராக் எல்லையில் உள்ள அப்தலி பாலைவனத்தில் எங்களை கொண்டு சேர்த்தனர் .அங்கே பெரிய கூடாரம் இருந்தது அது தான் தங்கும்  குடியிருப்பு என்றார் .
  அங்கு  நேபாள் நாட்டை சார்ந்த இரு காவலாளிகள் மட்டுமே இருந்தனர் .
  வேறு எங்கிருந்தோ எங்களுக்கு உணவு கொண்டு வந்திருந்தனர் .கோழி குழம்பும் ,சாதமும் பச்சை காய்கறிகளும் இருந்தது .சாப்பிட்டு தூங்கி எழுந்தோம் .
  காலையில் விழித்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தால் பாலை மணல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மணல்,மணல் மணல்பரப்பு மட்டுமே .பணியாளர்கள் தங்குவதற்கு 2 கூடாராமும் ,2 சிறிய கூடாரங்களும், அடுமனைக்கு ஒரு பெரிய கூடாரமும்  இருந்தது .பிளாஸ்டிக்கில் செய்த ஒரு கதவுடன் கூடிய அறை தான் கழிவறை .அதை எங்கும் நகர்த்தி செல்லலாம் .உள்ளே ரசாயன திரவம் இருக்கும் .அதனால் அது துர்நாற்றம் எடுப்பதில்லை .தினமும் காலையில் ஒரு வண்டி வந்து அதை உறிச்சிஎடுத்துவிட்டு சுத்தம் செய்து புதிய ரசாயன திரவத்தை ஊற்றி செல்வர். நான் காலையில் முதல் அல்லது இரண்டாவதாக செல்வேன் அதனால் சுத்தமான கழிப்பறை எனக்கு உறுதி .முதல் நாள் உள்ளே போய்விட்டேன் மலம் கழித்து முடிந்த பின்னர் தான் தெரிந்தது அங்கே தண்ணீர் இல்லை என . பேப்பர் தான் தொங்கி கொண்டிருந்தது .முன்பு உல்லாச கப்பலில் வேலை செய்த நண்பன் காதர் சொன்னது ஞபாகம் வந்தது .லே நான் கக்கூசுக்கு போய்ட்டு நேர குளிக்க போயிருவேன் அவனுவோ பேண்டா கழுவ மட்டானுவோ பேப்பர்ல துடக்க கேசு லே .நானும் நேராக குளியலறைக்கு சென்றேன் .
    கதிரவன் உச்சியில் இருக்கும் வேளையில் அதில் சிறுநீர் கழிக்க செல்வதே கடினம்.சூடு மண்டய பிளக்குது என்பான் ஒருவன் .
     ஒரு பிரபல சமையற்காரன் சுனில் வந்த பத்து நாட்களில் ஆட்களை சேர்த்து கொண்டு அந்த பாலையில் நீண்ட தூரம் சென்று வெட்ட வெளியில் காற்று வாங்கி மலம் கழித்து வருவான் .
   எங்களூரில் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் என எதோ சொல்வார்கள் .
   குளிப்பதற்கும் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்ட குளியலறைகள் எதிர் எதிர் வரிசையில் 5 வீதம் இருந்தது  நல்ல வசதியானவை.கதவு தான் கிடையாது .ஒரு பிளாஸ்டிக் திரைசீலை மட்டுமே தொங்கும் .உள்ளே யார் குளிக்கிறார் என யூகித்து விடலாம் .
   நாங்கள் இருந்த இடம் குவைத்தின் எல்லை பகுதி பெரும் பாலை .போர் துவங்கும் முன் அமெரிக்க விமான படை இங்குகொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டு தான்  போருக்கு இராக்கிற்குள் சென்றிருக்கிறார்கள்.
   அவர்கள் ஈராக்கை அமெரிக்கா தரைப்படை வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி நாட்டுக்கு செல்லும் போது குவைத் வழியாக வந்து மீண்டும் இங்கு கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு சென்றனர்.
  எங்களது கேம்ப் போல மொத்தம் 6 கேம்ப் கள் விமான படைக்கு உணவு தயாரித்து வழங்க.
   நாங்கள் சென்ற நான்கு நாட்கள் தினமும் உணவு தாயரித்து சாப்பிடுவோம் வேறு பணிகள் இல்லை .தினமும் 2௦பேர் வீதம் 5 நாளில் நூறு பேர் வந்து விட்டனர்.
 அமரிக்காவை சார்ந்த அதிகாரி வந்து சேர்ந்தார் .6 அடி உயரமும் நல்ல குண்டான உடலும் கொண்டவர் .அவருடன் தலைமை செப் ஆண்டிஎன ஒரு இங்கிலாந்து நாட்டுகார இளைஞன் ஒருவன் .நூறு பேரையும் ஒன்றாக நிறுத்தி நடுவில் நின்று யானையை போல கர்ஜித்தான் அமெரிக்க அதிகாரி .நாங்கள் செய்ய வேண்டிய வேலையை விவரித்தார் .அவர் பேசிய ஆங்கிலம் எதுவுமே எனக்கு புரியவில்லை .நண்பன் வெங்கட்ராமன் நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்தவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான் .அவன் அருகில் நின்று கொண்டு விசயத்தை கேட்டுகொள்வேன் .
    இரண்டு ஷிப்ட்கள்.வயதான தலைமை சமையற்காரர்கள் இருவர்  தலைமையில் இரண்டு குழுவாக பிரிந்தோம்.தலைமை சமயல்காராருக்கு 55 வயது அப்போதே நினைத்தேன் இந்த வயதில் வேலை செய்யகூடாது ஓய்வெடுக்க வேண்டிய வயது இது என.
   6 ம் நாளில் இருந்து பணி துவங்கியது .காலை ,மாலை ,இரவு இரண்டாயிரம் வீதம்  6ஆயிரம்  உணவு தாயரித்து.எல்லாம் நான் இதுவரை பார்த்திராத அமெரிக்க உயர்தர உணவு வகைகள்.அதற்கான பாத்திரங்களில் அடைத்து வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ள உணவுகூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  எனக்கு பகல் பணி .உணவு கொடுத்தனுப்பும் பாத்திரங்கள் வந்து குவியும் அதை  கழுவும் பணியில் அமர்த்தப்பட்டேன்.ஒரு வாரத்திற்கு பின் நன்றாக  வேலை செய்கிறான் என தலைமை சமையற்காரர் என்னை துணை சமையல் காரனுக்கு உதவியாளாக இருக்கும்படி சொன்னார் .அடுமனையில் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டே இருப்போம் .
 
 நானும் ,கார்த்திக்கும் அங்கு சந்தித்த தீபக்குடன் நல்ல நண்பர்களானோம் .மும்மூர்த்திகள்  என பிறர்  அழைத்தனர்.
   குவைத்தின் வேலை விசா வைத்திருந்தவர்கள் எங்களுடன் நிறையப்பேர் இருந்தனர்.அனைவரும் மலையாளிகள் அதில் ஒருவர் இமாம் வெள்ளிகிழமைகளில் ஜிம்மா தொழுகை நடத்துவார் .
  சேட்டன் மிக பிரபலம் .ஐம்பது வயதை நெருங்கியவர் .நல்ல கட்டி மீசையும் தொந்தியுமாக இருப்பார். ஷாஹுலே நினக்கு நரோல் ஆ ,நான் பண்டு அவிடயக்க லோரி ஒட்டியாதாணு .ஒருநாள் போனில் எடி மேரி பைசா எவிட ஈ வெள்ளியாச்சா பைசா தந்தில்லங்கி நின்னே இறக்கிவிடும்  மோளே பின் பல கெட்ட வர்தைகாளால் திட்டினார் .
 வெள்ளைக்காரன் ஆண்டி சேட்டன் என்றாள் என்ன அர்த்தம் என கேட்டான் .பின் அவனும் ஜார்ஜ் ஐ சேட்டா என்றே அழைத்தான் .
  ஒருநாள்  ஜார்ஜ்க்கும் எனக்கும் சண்டை ஜார்ஜ் மலையாளிகளை துணைக்கு அழைத்தான் .எனக்கு துணையாக தீபக் வந்தான் மச்சான் என்னடா பிரச்சனை என ஜார்ஜ் ஐ மிரட்டினான்  மற்றவர்கள் மலையாளிகுக்குள் சண்டை வேண்டாம் தீபக் நீ போ என்றனர் .ஒத்தா எவன்டா வாடா அவன் என் நண்பன் எனக்கு மலையாளி தமிழ் ஒன்னும் கிடையாது .மச்சான் பார்த்துருவோம் இவனுகள அடிச்சு போட்டுட்டு ஊருக்கு போகவும் நான் தயார் என்றதும் அனைவரும் விலகி சென்றனர் .
   இரண்டு வாரங்களுக்கு பின் வாரம் ஒருநாள் விடுமுறை. நாங்கள் மூவரும் ஒரே நாளில் விடுமுறையை வாங்கி கொண்டோம் .விடுமறை நாளன்று  குவைத்தின் மிர்காப் நகருக்கு வண்டியில் அழைத்து செல்வர் .காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை அங்கே உள்ள குளிரூட்டப்பட்ட வணிகவளாகங்களில் சுற்றி வருவோம்.பார்க்கும் அனைத்து பொருட்களும் தேவையுள்ளதாகவே தோன்றும் .

  அப்போது போர்முனை சலுகை என வாரம் 14 குவைத் தினார்கள் கிடைத்தது .அதிகபட்சம் 3 தினார்களுக்கு மேல் செலவில்லை எனக்கு.அங்குள்ள இந்திய உணவகத்தில் 750 பில்க்குஸ் மதிய சாப்பாடு.(1000 பில்ஸ் 1 தினார் )சில நாட்களில் நாங்கள் மூவரும் 5 மணி வண்டியில் செல்வதில்லை 8 மணி வரை சுற்றிவிட்டு தனியாக மலையாளி ஒருவரின் டாக்சியில் செல்வோம் .
21-09-2016
ஷாகுல் ஹமீது .
நேற்று இணையம் இல்லாததால் பதிவேற்ற இயலவில்லை 

3 comments:

 1. மணிக்கணக்காய் விமானநிலயத்தில் காத்துக்கிடந்தது ஒரு சோர்வுறச்செய்யும் அனுபவம் என்றால் , தூங்கி எழுந்ததும் கண்முன்னே விரியும் எல்லையில்லா பாலைவெளி எப்பேற்பட்டதோர் அனுபவம்?
  சண்டையும் நட்பும், சலுகையும் விடுமுறையுமாய் என்ன ஒரு கலவையான வாழ்வு உங்களுக்கு அங்கே?

  ReplyDelete
 2. சகோ... உன்னுடைய உரைநடை அபாரம்.. தேர்ந்த எழுத்தாளனுக்கான தகுதிகள் நடையில் தெரிகின்றன...ஆதி முதல் அந்தம் வரை சுவாரஸ்யம் குறையவில்லை.. எவ்வளவு நேரம் பிடிக்கும் இத்தனையும் எழுத...பெருமையாக இருக்கிறது சகோ...

  சேட்டன் பைசா கேட்டது எனக்கு மற்றொரு நபரை நினைவு படுத்தியது.. அவரை உனக்கும் தெரியும்...

  ஷெய்ஹ்...

  ReplyDelete