Thursday, 29 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 7


ஸ்டோர் கீப்பராக  புதிய அவதாரம் .
   திக்ரித் வரும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது .பாபிலோன் தொங்கு தோட்டம் உலகஅதிசயத்தில் ஒன்றாக இருந்தது முன்பு.சோதிடத்திலும் பாபிலோனியர்கள் தான் முன்னோடி .மன்னன் சிலரை பணிக்கு அமர்த்தி வருடக்கணக்கில் வானத்தில் தெரியும் நட்சத்திரங்களையும்,அதன் மாறுதல்களையும் கவனிக்க பணித்தானாம் .முன்பு படித்திருக்கிறேன்
   அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவைஎடுத்துகொண்டோம்.மீண்டும் ஒரு ராணுவ காண்வாயில் இணைந்து கொண்டோம் .மாலையில் திக்ரித் சதாமின் அரண்மையை அடைந்தோம் .
   வாயிலிலேயே ராணுவம் எங்களை கீழே இறங்க சொல்லி பரிசோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர் .அங்கே பணியாளர் தங்குவதற்கும் ,உணவுகூடம் ,அடுமனைக்கான கூடாரங்கள் அனைத்தும் தயாராகஇருந்தது சில பணிகளை தவிர .கூடாரம் அமைக்கும் குழு தொடர்ந்து பணிசெய்து கொண்டிருந்தது .
  அதனருகில் இருந்த ஒரு கட்டடத்தில் வீடு போல இருந்தது நான்கைந்து அறைகள் இரண்டு கழிப்பறையும் ,குளியலறையும் இருந்தது. அவை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டவை .சதாமின் அரண்மனையல்லவா .அன்றிரவு நாங்கள் பாபிலோனில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டோம் ,சாப்பிட தட்டு இல்லை எங்களுடன் பொருட்களை ஏற்றிய ஒரு கண்டெய்னர் லாரி வந்தது அதில் இருக்கும் ஆனால் இப்போது அதை தேடுவது கடினம் என்றார் அதன் ஓட்டுனர் .
    என்னுடன் வந்த பாலகாட்டு மோகனின் யோசானைப்படி கிடைத்த ஒரு  சில்வர் பாயில் ஐ  தரையில் விரித்து சாப்பிட்டோம் .என்னுடன் வந்தவர்களில்  மோகனை தவிர மற்ற நால்வரும் பெங்காலிகள் ,பிரான்சிஸ் பெயர் மட்டும் நினைவிருக்கிறது.பெரும்பாலான பெங்காலிகளுக்கு கோம்ஸ் என்று பெயர் இருக்கிறது .
  கார்த்திக் என்னை கண்டதும் கட்டியணைத்துகொண்டான் .பக்குபாவின் குண்டு வெடிப்பை காலையில் அறிந்ததாகவும்  .என்னை பற்றி கவலை கொண்டிருந்ததாகவும் சொன்னான் .
  அன்றிரவு நான் கூடாரம் செல்லவில்லை .கார்த்திக் இங்கேயே இரு நாளை போகலாம் என்றான்.அவனது அறையில் நான் அமர்ந்திருந்தேன் .கூடாரம் அமைக்கும் குழு ,மற்றும் எங்கள் நிறுவனத்தின் சில அதிகாரிகள் உட்பட பத்து பேருக்கு மேல் இருந்தனர் ,அமெரிக்க பெண் ஒருத்திதான் இந்த முகாமுக்கு கேட்டரிங் மேலாளர் என்றனர் .கார்த்திக் தான் அவர்களுக்கு சமையல்காரன் .
   அனைவரும் நாற்காலிகளை வட்டமாக போட்டு பீர் அருந்தியும் ,நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தனர்.கார்த்திக் வரும் வரை நான் தூங்காமல் இருந்தேன் .தாமதமாக வந்த கார்த்திக் தினமும் இரவு இவர்கள் இப்படி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர் என்றான் .
  காலை எட்டுமணிக்கு என்னுடன் வந்த பெங்காலி ஒருவன் எழுப்பினான் ,பணிக்கு அழைக்கிறார்கள் என .
   அன்று மாலையில் குவைத்திலிருந்து அனைத்து பணியாளர்களும் வந்தனர் .அந்த குழுவில் என் நண்பன் லோகேஷும் வந்திருந்தான் .கார்த்தி இங்குதான் இருக்கிறான் என்றேன்.மேலும் சில தமிழர்களை  லோகேஷ் அறிமுகபடுத்தினான் .
    முகாம் துவக்க விழாவுடன் சிறப்பாக துவங்கியது .கார்த்திக் சொன்ன டைகிரிஸ் நதியை பார்த்தேன்.கூடராமருகிலேயே நிறையை மரங்களுடன் பசுமையாக இருந்தது .
 
  முக்கிய அரண்மனை தூரத்தில் இருந்தது பாதுகாப்பு காரணங்களால் நாங்கள் அங்கு செல்ல இயலவில்லை .கார்த்திக் மட்டும் அங்கு நடந்த ஒரு விருந்துக்கு சிறப்பு அனுமதியுடன் சென்றிருந்தான் .ராணுவ தலைமை கமாண்டோ அங்கு தான் இருந்தார் .சுற்றிலும் சின்னதும் பெரியதுமாக 26 அரண்மனைகளை கொண்ட மிகப்பெரிய வளாகம் அது .டைகிரிஸ் ஆற்றை உள்ளே வரும்படி பாதை அமைத்து செயற்கையாக நீர்விழ்ச்சி அமைத்திருந்தனர்  நீர்வீழ்ச்சி கீழே விழும் இடம் பெரிய நீச்சல்குளமும் ,அருகில் நவீன சமையலறை ,குளியலறை போன்ற அனைத்து வசதிகளும் .
   சதாமின் ஆடம்பரம் அங்கு தெரிந்தது .சர்வாதிகார மன்னனல்லவா .குளிரூட்டி வசதியுடைய ஒரு பள்ளிவாசலும் இருந்தது மனம் நிறைவாக இருந்தது .
   இங்கு நான் வந்த மறுநாளே ஸ்டோர்ஸ் மேலாளர் தென்னாப்ரிக்காவின் ஜாக்கிடம் நான் ஸ்டோர்ஸ் ல் வேலை செய்ய விரும்புகிறேன் என்றேன் .முன்பு ஸ்டோர்ஸ் ல் வேலை செய்திருகிறாயா என கேட்டார் .ஆம் என பொய் சொல்லி அந்த பணியில் எளிதாக நுழைந்துவிட்டேன் .கொஞ்சம் வேலை கடினம் தான் 5000 ரூபாய் சம்பளம் அதிகம் அந்த பணிக்கு .
  கண்டெய்னர் லாரிகளில் தான் எங்களுக்கு உணவு பொருட்கள் வரும் .தினமும் 6 கண்டெய்னர் லாரிகளில் உள்ள பொருட்களை இறக்கி  எங்களிடம் உள்ள கண்டெய்னர் களில் அடுக்கி வைக்க வேண்டும்.மொத்தம் நாற்பது கண்டெய்னர்கள் இருந்தது.
அனைத்தையும் தனி தனியாக பிரித்து அதற்குரிய கண்டெய்னர்களில் வைத்திருப்போம் .
கோழி ,வான் கோழி வகைகள் (poultry),
ஆடு ,மாடு ,பன்றி இறைச்சி,அதில் குட்டி ஆட்டுக்கு லாம்ப் (lamp) குட்டி மாட்டிறைச்சிக்கு வீல் (veel)என அப்போதுதான் தெரியும் .
மீன் ,நண்டு ,இறால் ,கணவாய்,லாப்ஸ்டர் ,
பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் (frozen vegitables )
ஐஸ்கிரீம் வகைகள் ,
பழங்கள் ,மற்றும் காய்கறிகள் ,
பழரசங்கள் ,பால் ,பால் பொருட்களான ,வெண்ணெய் ,பாலடைகட்டி வகைகள்,

உலர்ந்த பழங்கள் ,உலர்ந்த கொட்டைகள்,
தேயிலை,காப்பி பொடிகள்
அரிசி ,மைதா சீனி,தூளாக்கப்பட்ட உருளைகிழங்கு வகைகள் ,
சுத்தம் செய்ய தேவைப்படும் ரசாயன பொருட்கள் ,சலவை கட்டிகள் என தனித்தனியாக நாற்பது கண்டெய்னர்களில் வகை படுத்தி ,வாரம் ஒருநாள் கணக்கும் எடுத்து சரிபார்ப்போம் .
.அடுமனைக்கு தேவையான பொருட்களை கொடுக்க வேண்டும் .ஒரு மேற்பார்வையாளர் உட்பட நாங்கள் பத்து பேர் ஸ்டோர்ஸ் ல்.
ஒரு வெள்ளைகார மேலாளரும் உண்டு எங்களுக்கு .
  அங்கு கேட்டான் ஆரே இன்லோக் கியா ,கியா காத்தாஹ் ஹை .
   எங்களுக்கு ஒரு டெம்போவும் ,பொருட்களை ஏற்றி ,இறக்க பயன்படும் போர்க் லிப்ட் (fork லிப்ட் )வாகனமும் இருந்தது .நான்கைந்து பேர் எல்லா வாகனமும் ஓட்டுவோம் .
    நான் ஓட்டுனர் உரிமம் வாங்கி 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் முழுமையாக வாகனம் ஒட்டியது ஈராக்கில் தான் .கைதிருந்தியது என்பார்களே .
  (வண்டி ஒட்டி பழகியதையும் ,உரிமம் பெற்றதையும் தேவையற்ற சுமைகள் என ஒரு பதிவு எழுதியுள்ளேன். )
   இங்கு வந்த புதிதில் என்னுடைய பிரிட்டிஷ் மேலாளர் ஒருவன் என் வயதையுடையவன் தான் ஷாகுல் வண்டி ஓட்ட தெரியுமா என கேட்டான் ஆம் என்றேன் .சாவியை கொடுத்து எடுத்துவா என்றான் .
  அங்க போய் பாத்தா அது ஒரு மினி பஸ் .நான் இதுக்கு முன்ன ஒட்டினதே இல்ல .தலையை சொறிந்துவிட்டு ,இடப்பக்க ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சாவி துவாரத்தை தேடினேன் .மிக எளிதகாக வண்டி இயங்க தொடங்கியது .தைரியாமாக முன் நகர்த்தி கொண்டு சென்றேன் .
   இவர்களை தொலைபேசிக்கு அழைத்து செல் என்றான் மேலாளர் .6 பேர் ஏறிக்கொண்டனர் .அனைவரும் கண்டெய்னர் ஓட்டுனர்கள். எகிப்து ,லெபனான் ,சிரியா நாட்டை சார்ந்தவர்கள் .நான் வாகனம் ஓட்டுவதை பார்த்துவிட்டு இவன் ஓட்டுனர் இல்லை என சொல்லி வண்டி போய்கொண்டிருக்கும் போதே ஓட்டுனர் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வரச்சொன்னான்.நானும் எழுந்து விட்டேன் அப்படியே மாறி அவன் ஓட்டினான் .
   அவர்கள் அனைவரும் தொலைபேசி முடித்து வந்ததும் நான் எனக்கு தெரிந்த அரபியில் என்னிடம் கார் இல்லை ,இதுதான் எனக்கு வாய்ப்பு வண்டி ஒட்டி பழக என்றேன் ஒத்துக்கொண்டு என்னையே ஓட்ட அனுமதித்தனர் .
   இங்கு கார்த்திக் சொன்னது போல் ஒருநாளும் குண்டு வெடிக்கவில்லை ,புதிய வேலையில் இயல்பாக ஒன்றிவிட்டேன் ,வெள்ளிகிழமைகளில் ஜும்மாதொழுகையும் ,புதிதாக வந்த நபர் களுடன் நட்பு கொண்டு மகிழ்ச்சியான  நாட்கள் ஆரம்பமாகி இருந்தது .
ஷாகுல் ஹமீது

28 -09-2016

Monday, 26 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 6

ஈராக் போர்முனை அனுபவங்கள்  6
 திக்ரித் ஐ நோக்கி புறப்பட்டேன் .

 
   எங்கள் முகாம் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் அது  சிறு காயங்கள் பட்ட அனைவருக்கும் முதலுதவியும் .கடும் காயங்களுடன் உயிர் தப்பியவர்களை ஹெலிகொப்டர் மூலம் குவைத்துக்கும் அழைத்து சென்றார்கள் .முனாவர் ,எங்கள் நிறுவனத்தின் சாலை போக்குவரத்தின் போது வரும் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட6 பேர் ஆபத்தான நிலையில் குவைத்துக்கு கொண்டு அவசரமாக அனுப்பி வைக்கபட்டனர் .
     நல்ல பசியும் தாகத்துடனும் இருந்தவர்களை அழைத்தேன் .உணவு கூடத்தில் நாற்காலிகள் சிதறி கிடந்தன .உணவு பாத்திரங்கள் திறந்த நிலையில் அப்படியே இருந்தது .நானும் நண்பர்களும் மாலை 4 மணிக்கு மேல் அமர்ந்து சாப்பிட்டோம் .உடலும் ,மனமும் களைத்துபோயிருந்தது .அடுத்து என்ன நடக்க போகிறது என்பதையே மனம் எதிர் பார்த்தது .
   உடனே கூட்டம் ஒன்றை நடத்தினர் .பணி செய்வது குறித்த பேச்சை துவங்கியதும் பலரும் இனி இங்கே வேலைசெய்ய முடியாது என்றனர் .கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது .
    இரவில் தூங்கிகொண்டிருந்த போது சப்தம் கேட்டது என்னுடன் வேலை செய்த மும்பையை சேர்ந்த இரு நண்பர்கள் கடுமையான வாய் தகராறில் ஈடு பட்டிருந்தனர்.அருவருக்கதக்க கெட்ட வார்தைகள் .
   இருவரும் இணை பிரியாத நண்பர்காளாகவே அனைவரும் அறிந்திருந்தோம் .மாதர் சோத் தும்ஹாரா மா ரண்டி என்றான்,அடுத்தவன் தேரீ மா ரண்டி ரே சாலா என அதையே திருப்பி சொன்னான் .
   ரஸ்ஸல் தன்னிடமிருந்த பீர் பாட்டில்களை கொடுத்திருக்கிறார் .ரோகன் தலைமையில் குடித்தவர்கள் போதை தலைக்கேறியதும் தகராறு .முன்பே மனகசப்புகள் அவர்களுக்குள் இருந்திருக்கும் பொய்யாக நண்பர்களாக இருந்திருப்பார்கள் போல.
   போதையில் மனதில் இருந்ததையெல்லாம் காது கூசும் வார்த்தைகளில் தாயை வைத்தே இருவரும் திட்டி தீர்த்தனர் .சப்தம் கேட்டு முகாமின் அமெரிக்க பொறுப்பாளர் வந்தார் .அரை மணிநேரத்துக்கும் மேல் அறிவுரைகள் சொல்லி சமாதானமாக போக சொன்னார் .நீங்கள் மும்பையில் மீண்டும் சந்திக்கலாம் அப்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வரும்போது இன்று நீங்கள் நடந்து கொண்டதை நினைத்து வெட்கபடுவீர்கள் என சொன்னார்.
       மேலும் இங்கு இன்னும் பலமான தாக்குதல்கள் நடக்ககூடும் என்பதால் தற்காலிகமாக இந்த முகாம் மூடப்படுகிறது என்றார் .ஒரு மாதம் எங்களின் கடின உழைப்பில் உருவாக்கிய முகாம் அது, ஒரு வேளை உணவை கூட முழுமையாக கொடுக்க முடியாமல் போயிற்று .
  முகாம் மூடப்படும் தகவல் அறிந்ததும் கலவரங்களின் போது கொள்ளை கூட்டம் ஒன்று புகுந்து கையில் கிடைத்ததை அள்ளி செல்லும் .அதுபோல் எங்களுக்கு உரிய தலையணைகள் ,போர்வைகள் ,கம்பளிகள்,சீருடைகள் என ஒரு குழு தகர  அலமாரியிலிருந்து அள்ளி எடுத்தது.எங்களுக்கு குவைத்திலிருந்து பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர்  ஒருவர் என்னிடம் நல்ல பழக்கம் கொண்டிருந்தார் .
    அவரின் உண்மை முகம் அப்போது தெரிந்தது ,நாம் எல்லோருமே திருடர்கள்தான் என்ற பாடல்  நினைவுக்கு வந்தது. சந்தர்பம் அமையும் போது மனிதனின் மனம் சுய கட்டுபாட்டை இழந்து விடுகிறது .
  நானும் வெங்கட்ராமனும்  பார்த்துக்கொண்டே இருந்தோம்  அந்த நிகழ்வால் கொஞ்சம் வருந்தினோம் .பின்பு எப்போது தூங்கினோம் என தெரியவில்லை கதிரவன் எட்டி பார்க்கும் முன்பே எழுந்துவிட்டேன் .
    காலை பத்துமணிக்கு இருபது பேர் வீதம் குழுக்களாக பிரிக்கபட்டு ராணுவத்தில் உளவியல் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஒரு கலந்துரையாடல் நடத்தினர் .யாருக்கெல்லாம் தலைவலி ,இரவில் கெட்ட கனவுகள் ,சரியான தூக்கமின்மை என கேட்டனர் .இதெல்லாம் உள்ளவர்கள் நார்மல் என்றனர் .லஷ்மண் அங்கே அமரவில்லை  தனியாக சுற்றிகொண்டிருந்தார் .
    திக்ரித் சென்றிருந்த கார்த்திக் இலங்கையின் ஓட்டுனர் அமர் அங்கு சென்று வரும்போதெல்லாம் கடிதம் அனுப்பினான் .திக்ரித் ன் அழகையும் ,டைகிரிஸ் நதிக்கரையையும் வர்ணிதிருந்தான் .கூடுதலாக அங்கு குண்டு வெடிப்பதில்லை எனவும் ,தூசியே இல்லாத மணல் பரப்பு என படிக்கும் போது வாய்ப்பை தவற விட்டு விட்டேன் என எண்ணுவேன் .
    அனைவரையும் குவைத்துக்கு அழைத்து செல்ல வண்டிவருகிறது தயாராகுங்கள் என்றனர் .ரஸ்ஸல் செல்லும் காரில் லஷ்மணனை அழைத்து செல்வதாகவும் .நமது நிறுவனத்துக்கான போக்குவரத்து பாதுகாவல் அதிகாரிகள் பாதுகாப்புக்கு வருவார்கள் .நாம் காண்வாயில் செல்லவில்லை என்றனர் .
     மூன்று வாகனங்களில் நாங்களும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாகியுடன் முன்பும் பின்பும் என 5 வகானங்களில் புறப்பட்டோம் .நான் கனவில் மூழ்கி மும்பையை ஒரு சுற்று சுற்றுவிட்டு மீண்டும் வாகனத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்.செங்கதிர்  மேகங்களில்பட்டு பிரகாசிக்கும் வேளையில் ஒரு முகாமுக்குள் இரவை கழிக்கும் பொருட்டு உள்ளே சென்றோம் .
    பக்குபா சென்ற புதிதில் எங்களுடன் இருந்து இந்த குண்டுவெடிப்பில்  வேலைசெய்ய முடியாது என்று அழைத்துசென்றவர்கள் அனைவரும் அந்த முகாமில் மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தனர் .அது ஒரு சிறிய முகாம் முப்பது பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் .
  என்னுடன் குவைத்தில் இருந்த தீபக் தலைமைசமையல்காரன் ஆக பதவி உயர்வு பெற்றிருந்தான் .மச்சான் வாடா எப்படிடா இருக்கே .நான் என் மேனஜேர் ட சொல்லி உன்ன இங்க இருக்க ஏற்பாடு செய்றேண்டா என்றான்.
   கோவாவை சேர்ந்த டோமிங்கோவும் பக்குபாவிலிருந்து பிரிந்து சென்றவன் .ஷாகுல் நீ ரொம்ப ஒல்லியாயிட்டே அங்க சாப்பாடு இல்லையா,கடுமையான வேலையா என கேட்டான் .பக்குபாவில் முகாம் துவங்குவது வரை நாங்கள் காலையில் சமைக்கவே இல்லை .சிலநாட்கள் நானும் ,மணிகண்டனும் இரவில் சோற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி ஐஸ் பெட்டியில் வைத்து ,மறுநாள் காலையில் பச்சை மிளகாவுடன் கஞ்சி குடிப்போம்  அந்த சுவையே தனி .
   இரவில் யாரோ தகவல் சொன்னார்கள் பக்குபாவில் காயமடைந்து குவைத் கொண்டு சென்றவர்களை அங்கிருந்து எங்கள் நிறுவனம் தனி விமானத்தில் உயர்மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனியில் மருத்துவமனையில் இருப்பாதாக.  முனாவருக்கு ஒரு கால் முழுமையாக துண்டிக்கப்பட்டது என கேட்டதும் எனக்கு அழுகையாக வந்தது .ஸ்காட்லாந்து பாதுகாப்பு அதிகாரிக்கு மார்பை கிழித்து அறுவை சிகிட்சை செய்தும் ,மற்ற நான்குபேர் ஆபத்தான நிலைமையில் இருந்து தேறிவருவதாகவும் சொன்ன்னார்கள் .
     வெங்கட்ராமன் குவைத் சென்றபின் அங்கிருந்து மும்பை செல்வதாக உறுதியாக சொன்னான். என்னால் முடிவெடுக்க முடியவில்லை .மீண்டும் இவ்வளவு குறுகிய நாட்களில் மும்பை திரும்பி செல்ல என் மனம் விரும்பவில்லை .
     ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையுடைய மாடி அறை கோடையில் பகலில் அறையில் இருக்கவே முடியாது அனல் போல் கொதிக்கும் வெப்பம் .மாஹிம் ரயில் நிலையம் போகும் வழியில் இருக்கும் நடைபாதையில் இருக்கும் மரத்துக்கு கீழ் உள்ள சுவரில் தான் பெரும்பான்மையான நாட்களை கழித்திருப்பேன் .
       பட்டினியாக வேலை தேடிய நாட்களே அதிகம் எனவே மும்பை திரும்பி போவதில்லை என்பதில் உறுதியானேன் .பெரும்பான்மையானவர்கள் ஊருக்கு செல்லும் முடிவில் உறுதியுடன் இருந்தனர் .நான் மீண்டும் பக்குபா சென்று பணி செய்யவும் தாயாராயிருந்தேன் .
    குவைத்திலிருந்து திக்ரித் செல்லும் வாகனம் ஒன்று அன்றிரவு நாங்கள் இருந்த முகாமில் இரவு தங்கினர் .திக்ரித் செல்லும் பணியாளர்கள் பலர் பக்குபா குண்டுவெடிப்பை திகிலுடன் பெரேராவிடம் கேட்டுகொண்டிருந்தனர் .
   மறுநாள் காலையில் திக்ரித் செல்லும் வாகனத்தில் வந்த அனைவரும் அங்கு செல்ல மறுத்து விட்டனர் .
     5 பேர் மட்டும் திக்ரித் செல்லும் வண்டியில் இருந்தனர் .திக்ரித் செல்லும் வாகனத்தில் அருகில் நின்று கூவி அழைத்தனர் யாராவது திக்ரித் வருகிறீர்களா என. நான் நண்பன் தீபக்கை நான் தேடிகொண்டிருந்தபோது என் காதில் அது கேட்டது திக்ரித் ,திக்ரித் என .எதையும் யோசிக்கவில்லை,தீபக்கை பார்க்கவே இல்லை நேராக என் பைகளுடன் சென்று திக்ரித் செல்லும் வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.
   அதற்குள்  தீபக் என்னை தேடி என் பேருந்து அருகே வந்துவிட்டான் .என்னடா மச்சான் நீ என்ட்ட சொல்லாமலே போற சரி போய்விட்டு வா என மகிழ்ச்சியுடன் கையசைத்தான் .நாங்கள் 6 பேர் மற்றும் ஒரு நியூசிலாந்து நாட்டை சார்ந்த அதிகாரியுடன் வண்டி மீண்டும் புறப்பட்டது ,பாக்தாத் ,பக்குபா வழியாக திக்ரித் ஐ நோக்கி .
   நண்பன் கார்த்திக்கிடம் மனதில் பேசிகொண்டிருந்தேன் நான் வருகிறேன் உன்னை நோக்கி என.
    பின்பு தீபக் நான் மும்பையில் இருந்த போது என்னை தேடிவந்து சந்தித்தான் .2014 ம் ஆண்டில் ஒருமுறை நான் கொச்சி செல்லும்போது ஆலப்புழா ரயில் நிலையத்தில் அவனை வரசொல்லி சந்தித்தேன் .
ஷாகுல் ஹமீது

26-09-2016 

Sunday, 25 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 5


குண்டு மழை பொழிந்த பக்குபா        
 தூசு மிகுந்த பக்குபாவில் எங்கள் முகாமை நோக்கி தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்தது . இப்போதெல்லாம் இரவில் குண்டு வெடிக்கும்போது  கார்த்திக் பங்கர் பாதுகாப்பு சுவருக்கு வருவதே இல்லை .
    இங்கு வந்த பத்து நாட்களுக்குள் பாதிபேர் இங்கு வேலை செய்ய முடியாது .உயிருக்கு உத்திரவாதமிலாத இந்த வேலை எங்களுக்கு தேவையில்லை எங்களை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள் என முறையிட்டனர் .வேலைக்கு வரவும் மறுத்து விட்டனர் .
   அடுத்த சில நாட்களில் அவர்களை முகாமிலிருந்து அழைத்து சென்றனர் குவைத்திலிருந்து இந்தியா அனுப்பி வைப்பதாக அழைத்து சென்றனர் .
   எங்களுக்கு குளிக்கவும் ,மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் வெளியிலிருந்து தான் வரவேண்டும் .சில பாதுகாப்பு காரணக்களுக்காக  ராணுவம் முகாமை விட்டு வெளியே செல்லவே இல்லை தண்ணீர் எடுத்து வர .பனிரெண்டு நாட்கள் நான் என் வாழ்வில் குளிக்காமல் இருந்ததும் அங்கேதான் .நல்ல வேளையாக குடிநீர் போத்தல்கள் மட்டும் தேவைக்கு அதிமாக இருந்தது .
   குளிரூட்டி வசதியுடைய கூடாரத்திற்குள்  நான் தகர அலமாரி செய்து கொண்டிருந்தேன். சட்டை அணிவதே இல்லை அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்து வெற்றுடலுடன் பணி செய்வேன் .இப்போது நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 வரை செய்ய தொடக்கி விட்டேன் . ஆடைகளை துவைக்கவும் முடியாது .
   ஜட்டி எல்லாம் அலசாம போடமுடியாது .முணு நாளா ஒரே ஜட்டி தான் போட்டுருக்கேன் எல்லாம் அழுக்காயாச்சி  போய் கேப்போம் வா என மேற்பார்வையாளர் ரோகனுடன் சென்றோம் .
  உள்ளாடைகளை துவைக்காமல் அணிய முடியாது என ரஸ்ஸலிடம் கேட்டோம் .ஆளுக்கு 3 போத்தேல் குடிநீர் தந்தார் உள்ளாடை மட்டும் துவைக்க .பக்கட் கிடையாது .தண்ணீர் போத்தல் வரும் அட்டை பெட்டியில் பாலிதீன் பையை போட்டு அதில் துவைத்தோம் .
  கழிப்பறையை  சுத்தம் செய்ய வண்டியும் 12 நாட்கள் வரவில்லை.எல்லோரும் பேப்பர் உபயோகிப்பதால் நிரம்பி வழியும் தருவாயில் நிலைமை சரியானாதால் தப்பித்தோம் .
   உடன் வேலைசெய்த மங்களூர்காரர் நான் இன்னைக்கு பாட்டிலால் குத்தி அமுக்கிட்டாக்கும் காலத்த போனது என்றார். நல்ல வேளையாக மறுநாள் சுத்தம் செய்யும் வண்டி வந்தது .
  ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்வார்கள் .வாரத்தில் 3 நாட்கள் மலத்தை அள்ளி வெளியே வைத்து தீயில் எரிப்பதை பார்த்திருக்கிறேன் .சிலநேரம் அழகிய இளம்பெண்கள் அந்த பணியை செய்வதுண்டு .
  குளிப்பதற்கு கொஞ்சம் தடிமனான ஈரமான (wet tissue peper ) பேப்பேர்கள் தான் அவர்களுக்கு .காற்று புகாத பையில் அடைத்து வைத்திருக்கும் .இரண்டு கைக்கும் 2,கால்களுக்கு ஒன்று கழுத்து முதல் இடுப்பு வரை ஒன்று இடுப்புக்கு கீழ் பகுதிக்கு ஒன்று  அதுதான் ஒரு நல்ல குளியல் .
  
    ஜூலை நான்காம் தியதி அமெரிக்க சுதந்திரதினம் அன்று அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றனர் .எங்களிடம் பெரிதாக எந்த வசதியும் இல்லை குறைந்தது இரண்டாயிரம் உணவு தயார் செய்யவேண்டும் .
   இரண்டு மூன்று மின்சார அடுப்புகள் மட்டும் கிடைத்தது .பொருட்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளை ,குளிர்சாதன பெட்டியாக பயன்படுத்தினோம் .மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஜூலை நாலாம் தியதி இரண்டாயிரம் பேருக்கு ஒருவேளை உணவு கொடுத்து அவர்களை மகிழ்வித்தோம் .
     பணி செய்ய மேலும் நிறையபேர் வந்து விட்டனர் .குவைத்தில் என்னுடன் இருந்த வெங்கட்ராமன் வந்து சேர்ந்தான் .நிறைய புது முகங்கள் குவைத்தில் எங்களுடன் இருந்து வேறு வேறு இடங்களுக்கு பிரிந்துசென்ற பலரும் வந்திருந்தனர் .
   உணவு கூடாரம் பணி முடிந்துவிட்டது .இன்னும் சிறு பணிகள் முடித்தால் உணவுக்கூடம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் .அதிகாரிகள் விரைவில் துவங்கும் முனைப்புடனேயே வேலை செய்து கொண்டிருந்தனர் .
   ஒரு நாள் கார்த்திக் என்னிடம் வந்து நான் திக்ரித் போறேன் 2 பேர் தேவை அங்கு நீயும் என்னுடன் வா என்றான் .
 ரஸ்ஸலுடன்பேசி விட்டேன் எனக்கு பதவி உயர்வு தருவதாக உறுதியளித்துள்ளான் என்றான் .நான் அங்கு வந்தால் எனக்கு என்ன கிடைக்கும் என கேட்டேன் உனக்கும் பிறகு பேசி பார்க்கலாம் என்றான் .
  நான் வரவில்லை என்றேன் .கடந்த ஒரு மாதமாக இங்கு கஷ்டப்பட்டு கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்தோம் இன்னும் சில நாட்களில் முழுமையாக வேலை துவங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றேன் . கூடாரம் அமைக்கும் குழு இப்போதுதான் அங்கு செல்கிறது நான் வரவில்லை என்றேன் .
   கூடாரம் அமைக்கும் குழு திக்ரித் சதாம் அரண்மனையில் அடுத்த முகாம் துவங்குவதற்க்கான அங்கு செல்கிறது .அந்த குழுவுக்கு சமைக்க ஒரு சமையல்காரரும் ,உதவியாளரும் தேவைப்படுவதால் என் விருப்பத்தை கேட்காமலேயே ரஸ்ஸலுடன் ஒத்துகொண்டு வந்து என்னை அழைத்தான்.நெருங்கிய நண்பன் என்ற உரிமையில் அவன் எடுத்த முடிவு அது.
  பின்பு கார்த்திக் வேறு ஒருவரை அழைத்து சென்றார் .கடும் தூசு காரணமாக ஒவ்வாமையில் அவதிப்பட்டவர் அவர்,பக்குபாவில் தினமும் வெடிக்கும் குண்டுமழை ,சாவின் அருகில் பயத்துடனேயே வாழ்க்கை போன்ற காரணங்காளால் இங்கிருந்து சென்றுவிட நினைத்தவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார் .
  இப்போதெல்லாம் இங்கு குண்டு வெடிப்பது அதிகமாகிவிட்டது .மனதளவில் பலர் பாதிக்க பட்டிருந்தனர் .எங்கள் மேற்பார்வையாளர் ஆந்திராவின் லக்ஷ்மணன் பரிதாபத்திற்க்கு உரிய வகையில் என் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியம் ஆவதை கண்டேன் .50 வயதை தாண்டியவர் நல்ல அறிவு முதிர்ச்சியும் ,ஆங்கில புலைமையும் உள்ளவர் .
    தேவையே இல்லாமல் வணக்கம் சொல்வது ,சிரிப்பது உரையாடல்கள் என.இருந்தாலும் பெரும்பான்மையான நேரங்களில் இயல்பான மொழியில் நன்றாகவே பேசுவார் .ஒரு நாள் மாலையில் குளியல் அறைக்கு சென்றேன் அது  ராணுவ வீரர்களுக்கானது எங்களுடைய குளியல் அறை இன்னும் பயன்பாட்டுக்கு வாராத நேரம் அது .
  உள்ளே சென்ற போது தான் தெரிந்தது தண்ணீர் இல்லை என .அப்போதுதான் கவனித்தேன் உள்ளே தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துகொண்டிருந்தார் .அவரை அழைத்தேன் ஷாகுல் நீ போ குளித்துவிட்டு வருகிறேன் என்றார் .ஆடை கூட மாற்றியிருக்கவில்லை அவர் .
  என் கண்கள் நிரம்பியது .என்னால் அவரை அங்கு விட்டு வர மனம் இல்லை .என்னுடன் குவைத்திலிருந்து ஒன்றாக வந்தவர் .எப்போதும் எனக்கும் பிறருக்கும் மரியாதை தருபவர் .அவரது ஆங்கில உச்சரிப்பை பலரும் கிண்டலடிப்பார்கள் .பெரும்பான்மையான ஆந்திராகாரர்கள் அப்படிதான் பேசுவார்கள் போல . எல்லாவற்றிற்க்கும் நகைசுவையுடன் பதிலளிப்பார்.
    லக்ஷ்மண் வாங்க போலாம் குளித்து போதும் என்றேன் மணலால் உடல் தேய்த்தார் தண்ணீர் இல்லாமலே மீண்டும் குளித்தார் ,வெளியே வந்தவர் ஆளுயர கண்ணாடியில் முகம் பார்த்து தலை வாரிக்கொண்டார் .
   தினமும் குண்டு வெடிப்பதால் உயிர் பயத்தில் ஒரு வாரத்தில் ஒருவர் நான் பார்த்துகொண்டிருக்கும்போது  முழு பைத்தியமாக ஆகிவிட்டார்.என் கவலை இனி அவரை எப்படி பாதுகாக்க போகிறோம் என்றுதான் .
   எல்லாம் ஆயத்தமாகி அன்று துவங்கியது ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்கும் நான் .முதல் நாள் என்பதால் பல சிறப்பு உணவுகள் ,டி போன் ஸ்டேக் ,கிங் கிராப் ,இறால்,லாப்ஸ்டர்  என அமர்களபடுத்தினர் .
  ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்தி கொண்டிருந்தனர் .இன்னும் பெருங்கூட்டம் வந்து கொண்டே இருந்தது .முகாமுக்கு வெளியே உள்ள ராணுவ மையங்களில் இருந்து உணவை எடுத்த செல்லவும் நீண்ட வரிசை .ரோகன் என்னிடம் ஷாகுல் நீ போய் அவர்களுக்கான உணவை அடைத்து கொடு என ஒரு பட்டியலை என்னிடம் தந்தான் .அங்க இருக்கவனுக்கு இத்தனை பேரை சமாளிக்க முடியல ப்ளீஸ் என்றான் .
     நான் வந்த அரைமணிநேரத்தில் நீண்டவரிசை குறைந்து பத்து பேர் மட்டுமே என் முன்னால் நின்று கொண்டிருந்தனர் .
   அப்போது கையில் உணவுடன் வந்த முனாவர் ஷாகுல் வா சாப்பிட போகலாம் என அழைத்தான். அவனுக்கு பிடித்த இறாலும்,டி போன் ஸ்டேக் கும் அந்த தட்டில் இருந்தது.முனாவர் இங்க பாரு இத்தனை பேரு என் முன்னால நிக்கானுவோ பாவம் அனுப்பி உட்டுட்டு வாறேன் நீ போய் சாப்புடு என அனுப்பிவைத்தேன் . மணி 2 ஐ நெருங்கியிருந்தது .என் கட்டிலின் அருகில் குளிரூட்டி இருப்பதால் இடைவெளி நிறைய இருக்கும் .முனாவர் அங்கு தான் தொழுகைக்கு வருவான் .அதனால் அவனுடன் நல்ல பழக்கம் எனக்கு .
     அடுத்த 2 நிமிடத்தில் சாராமரியாக எங்கள் கூடாரங்களின் அருகில் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தது வீரர்கள் உடனே தரையில் படுத்து கொண்டனர் நாங்களும் தான் .பலரும் சிதறி ஓடினர்.நானும் வெளியே ஓடினேன் அருகில் இருந்த பங்கர் சுவற்றுக்குள் போய் பதுங்கி கொண்டேன் .
  லக்ஷ்மண் எதையும் உணாராதவராய் பங்கர் அருகில் இருந்த உயரமான மணல் மூட்டைகளின் மேல் என் டி ஆர் பாட்டு பாடி கைவீசி நடந்து கொண்டிருந்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது .எங்களுடன் இருந்த ராணுவ வீராங்கனை ஒருத்தி தேம்பி ,தேம்பி அழுதுகொண்டிருந்தாள் இருபது வயதை பூர்த்தியடையாத இளம் மங்கை அவள் .
   ராணுவத்தில் இருந்தாலும் உயிர் பயம் எல்லோரையும் போலத்தான் தானே .அவளை நாங்கள் சமாதன படுத்தினோம் .
   பின்பு தான் தெரிந்தது முனாவர் கையில் உணவுடன் எங்கள் குடியிருப்பு வாயிலை நெருங்கியபோது அவனருகிலேயே குண்டு விழுந்ததால் மிக ஆபத்தான நிலையில் அவன் இருப்பதாக சொன்னார்கள்.2 நிமிடங்களுக்கு முன் என்னை சாப்பிட வா என நட்புடன் அழைத்தவன்.

    சந்தோஷ் இரு கால்களும் தொடைமுதல் பாதம் வரை பாண்டேஜ் ஆல் சுற்றப்பட்டு தூக்கி வந்தார்கள் .பலருக்கு காயம் எங்கள் முகாமில் இருந்த ராணுவ முதலுதவி மையத்தில் முதலுதவி மட்டும் அழைத்தனர் .
ஷாகுல் ஹமீது 
25-09-2016

Friday, 23 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 4

பாக்தாத்தில்
      காலையில்   ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன நாங்களும் இணைந்து கொண்டோம் .மாலையில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத் ஐ அடைந்தோம் .
  பாக்தாத்தின் விமான நிலையமும் அமெரிக்க படையின் கட்டுபாட்டில்தான்,ஆனால் விமான நிலையம் இயங்கவில்லை .இன்றிரவு இங்கு தங்கிவிட்டு காலையில் புறப்புடுவோம் அருகில் தான் பக்குபா என்றனர் .
  மாலையில் அமெரிக்கர்களின் ரக்பி பந்து ஒன்று கிடைத்தது .இருட்டும் வரை மகிழ்ச்சியாக விளையாடினோம் .
  நானும் நண்பன் ஒருவனும் இரவில் எங்களுடைய பேருந்தின் மேல் படுத்துகொண்டோம் .நள்ளிரவு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது .பயத்தில்  எழுந்து அதிர்ச்சியுடன் கீழே இறங்கினோம் .பின்பு பேருந்துனுள் அமரும்படி வேண்டினர் .அது தான் முதல் குண்டு வெடிக்கும் சப்தம். அப்போது தெரியவில்லை தினமும் அருகிலேயே பொழியும் குண்டு மழையில் தான் இனி நாட்கள் கழிய போகிறது என .
   ஒருவன் கேட்டான் பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்ய என யாரிடமும் பதில் இல்லை .நெடுநேரத்திற்கு பின் எப்போதோ தூங்கியிருப்பேன் .காலையில் எழுந்தபோது .கொஞ்சம் பிரட்டும் பாலும் கிடைத்தது சாப்பிட .காலை பத்துமணிக்கு மேல் தான் எங்களுடைய வாகனம் புறப்பட்டது .பாதுகாப்புக்கு வந்த ராணுவ வாகனங்கள் எல்லாம் சென்று விட்டது .எங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு ஜீப் மட்டும் வழிகாட்ட அதை பின் தொடர்ந்து சென்றோம் .பாக்தாத் சாலைகள் நல்ல நீள அகலமாகவே இருந்தது நீண்ட நாள் பாராமரிக்க படவில்லை .ஒற்றை கழுதை வண்டி ஒன்று பார்த்தேன்  அந்த சாலையில் .தொடர் போர்களினால் பாதிக்க பட்டதின் விளைவு .இல்லையெனில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஈராக் .11 ஆண்டுகள் இரானுடன் போர் .பின் 1991 ம் ஆண்டில் குவைத் எனது மாநிலம் என சதாம் படைகளை அனுப்பி பிடிக்க.மீண்டும் போர் .அமெரிக்க படைகளை அனுப்பி குவைத்தை மீட்டது .
  இப்போது மீண்டும் போர் .
  சதாமின் பிரமாண்ட சிலை உடைக்கபட்டிருந்த இடத்தையும் பார்த்தேன்.எங்கள் வாகனத்தில் அனைவரும் கொஞ்சம் பயத்துடன்தான் இருந்தனர்.மதியத்திற்குள் பக்குபாவை அடைந்தோம் .
  வாயிலில் எங்கள் அனைவரின் உடமைகளையும் பயணபைகளை ஏற்றிவந்த வண்டியிலிருந்து இறக்கி ஒன்று விடாமல் சோதனை செய்தனர் .ஒரு சிலரிடமே செல் போன்கள் இருந்தது .அதை வாங்கி வைத்து கொண்டனர் .என்னிடம் குவைத் முகாமில் அமெரிக்க அதிகாரி அன்பளிப்பாகக் தந்த வளைந்த,கைபிடியுடன் கூடிய போர்கத்தி  இருந்தது .அதையும் அனுமதிக்கவில்லை .
   நகம் முடி என அனைத்தையும் சோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர் .பக்குபா ஈராக்கின் ராணுவ மையமாக இருந்திருக்கிறது .ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்கவும் ,மேலும் பல வசதிகளும் இருந்திருக்கும் .அவைகளை பயன்படுத்தி கொள்ளவே அமரிக்கா அங்கே ஒரு முகாமை அமைத்திருந்தது .
  பக்குபாவின் மணல் பெரும் தூசு படலம் .காலை தரையில் வைத்தால் ஒரு அங்குலத்திற்கு மேல் பதியும் .வாகனங்கள் அருகில் சென்றால் தூசு படலம் காரணமாக குறைந்தது 1 நிமிடம் எதிரில் எதுவும் தெரியாது .
    எங்களுக்கு குடியிருப்பு கூடாரம் மட்டுமே இருந்தது .உணவு கூடம் இன்னும் தயாராகவில்லை .
  நாங்கள் இருபது பேர் மட்டுமே இருந்தோம் .எங்களுக்கு இரவுணவாக சாதமும்,கோழி குழம்பும் தயார் செய்தனர் .சமைப்பதை அறிந்து இரு ராணுவ வீரர்கள் எங்களிடம் வந்து ஓரமாக ஒதுங்கியே நின்றுகொண்டிருந்தனர் .உணவு தயாரானதும் முதலில் அவர்களை அழைத்து உணவை கொடுத்தோம்.
    நன்றி என பலமுறை சொன்ன பின் உணவை வாங்கி சென்றனர் .நாம் சாப்பிடும் அந்த காரம் அவர்களால் சாப்பிடவே இயலாது .தட்டு நிறைய சோறு சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்கில்லை ,நீண்ட நாட்கள் பையில் அடைத்த காய்ந்த உணவை சாப்பிட்டு நாக்கு செத்து போனவர்களுக்கு .சூடாக புத்தம் புதிதாக கிடைக்கும் உணவு அமிர்தம் தானே.பசியுடன் இருப்பவர்களுக்கு முதல் தேவை உணவுதானே.அன்று அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருக்கலாம் .மறுநாள் முதல் தினமும் இரவில் மூன்று அல்லது நான்கு பேர் வந்தனர் .
  அன்றிரவு நாங்களும் இருநாட்களுக்கு பிறகு சாப்பிட்ட நிறைவை உணர்ந்தோம் . குளீருட்டி வசதி செய்யப்பட்ட கூடாரம் .நான்கு குளிரூட்டிகள்.அந்த கூடாரத்தில் செங்குத்தாக 6 அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தது .குளிரூட்டிக்கு அருகில் இருந்த கட்டில்கள் நிறைய இடைவெளி இருந்ததால் நானும் கார்த்திக்கும் அதனருகில் உள்ள இரு கட்டில்களை தேர்வு செய்தோம் .
  இங்கே குளிப்பதற்கு ராணுவ வீரர்களுக்கான குளியல் அறைக்கு தான் செல்லவேண்டும் .உள்ளே சென்றால் முதல் அறையில் துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு வின் உள் அறைகளில் சென்று குளிக்க வேண்டும் .குளியலறைக்கு கதவோ ,திரை சீலையோ இல்லை .
    உள்ளே  போன ஒருவன் என்னப்பா இது குளிக்க போனா எதுதாப்புல ஒருத்தன் துணி இல்லாம குளிக்கான் அவன பாத்துட்டுதான் குளிக்க வேண்டியிருக்கு .
   நீ அந்த கறுப்பனுக்க மின்ன நின்னா குளிச்சா .ராத்திரி காய்ச்சல் மாத்திரை போட்டுக்கிட்டு படு என்றான் மணிகண்டன் .
  வீராங்கனைகளின் குளியலறையும் அருகருகில் தான் .
      மறுநாள் காலை   ஒரு கூட்டம் அறிமுக உரைதான் .தினமும் கூட்டம் நடத்தாமல் எந்த வேலையையும் அவர்கள் துவங்குவதில்லை .தவறுகளும்,புரிந்துகொள்ளாமையும் (miss  understanding )பெரும்பாலும் தவிர்க்கபடுகிறது அதனால் .
    இங்கிலாந்தின் ரஸ்ஸல் தான் எங்களுக்கு அதிகாரி (project manager)இங்கே உணவு  கூடத்திற்கான பெரிய கூடாரம் தயாராகும் வரை நாம் கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்ய வேண்டும் என்றார் .கூடாரம் தயாரானதும் நமது பணிகள் துவங்கும் இங்கு தினமும் ,காலை ,மதியம் ,இரவு என எட்டாயிரம் உணவு வழங்கபட வேண்டியிருக்கும் என்றார் .
   இரு நாட்களுக்கு பின் எங்களுக்கு பொருட்கள் வைக்க தகர (locker)அலமாரிக்கான பாகங்கள் வந்தன .ரஸ்ஸல் எங்கள் அனைவரையும் அழைத்து மொத்தம் நூறு அலமாரிகள் வந்துள்ளன யாருக்காவது இதை ஒன்றிணைக்க தெரியுமா என்றார் .நான் வரைபடத்தை வாங்கி பார்த்தேன் எளிதாக இருந்தது .நான் செய்கிறேன் என்றான் சரி பீட்டர் ஐ உதவிக்கு வைத்துகொள் என்றார் .தங்கும் கூடாரத்திற்குள்ளேயே அதை ஒன்றிணைப்பேன் .
     அதனால் நானும் பீட்டரும் வெயிலில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்திருந்த குழுவிலிருந்து தப்பித்தோம் .முதல் நாள் நான்கு அலமாரிகள் மட்டுமே செய்ய முடிந்தது .

 இரண்டாம் நாள் இரவில் எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது .அனைவரும் ஓடி வெளியே வந்தோம் .கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும்  சுவருக்குள் அனைவரும் சுவருக்குள் சென்று பதுங்கி கொள்வோம்.ஆட்களை எண்ணுவார்கள் பின்பு சிறிது நேரத்திற்கு பின் தூங்க செல்வோம் .பகல் வேளையாக இருந்தால் பேக் டுவொர்க் என்பார்கள் .  இங்கு ஒரு நாளும் நிம்மதியாக தூங்க முடியவில்லை .
ஷாகுல் ஹமீது
24-09-2016

Thursday, 22 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் .3


 பாலையில்
 ஒருமாதம் விரைவாக சென்றுவிட்டது.காலை ஆறுமணிக்கு எழுவேன் கழிப்பறையும் ,குளியலறையும் சுத்தமாகவும் ஆட்கள் இன்றியும் இருக்கும்.என்னை போல் மிக சிலரே காலையில் எழுவர் அதனால் பரபரப்பில்லாமல் காலையில் தயாராகிவிடுவேன் .எட்டு மணிக்கு வேலைக்கு சென்றால் நாள் விரைவாக முடிந்து விடும்.
அங்கே அவ்வப்போது  மணல் புயல் வீசும் .மணல் காற்றுடன் சுழன்றடிக்கும் எதிரில் நிற்பவர் கூட தெரியாது .எங்கள் கூடாரமே கிழே விழுந்து விடுமோ என அச்சமாக இருக்கும் .மணல் வீசியடிக்கும் முடிந்தவரை அனைத்தையும் மூடி வைப்போம் .
  அமெரிக்க அதிகாரி சென்றுவிட்டார் .புதிய அதிகாரி தென்னாப்ரிக்காவின் டேவிட் வந்தார் .வேலை வெகுவாக குறைந்து விட்டது பெரும்பாலான வீர்ர்கள் ஊருக்கு சென்றுவிட்டதால் .எழுநூறுக்கும் குறைவாகவே உணவு தயாரிக்க வேண்டியிருந்தது .
  டேவிட் அனைவருக்கும் வாரத்தில் 2 நாள் விடுமுறை தந்தார் .ஆனால் ஒருநாள் தான் குவைத் நகருக்கு செல்லவேண்டும் .எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றார்.
     ராணுவ வீரர்கள் சாப்பிடும் இடத்தில் உணவு பரிமாறுபவர்கள் காலை ஐந்தரை மணிக்கே சென்று விடுவார்கள் .அதில் ஒருவன் ஒருநாள் தனது கைபேசியை காணவில்லை அனைவரது பைகளையும் நான் திறந்து பார்க்க வேண்டும் என்றான் .
   வரிசையாக ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தான் .என்னருகில் வந்தபோது கார்த்திக் நான் உன் போனை எடுக்கவில்லை நான் திருடன் இல்லை என எங்களுடைய பையை திறக்க அனுமதிக்க முடியாது என உறுதியாக மறுத்துவிட்டான் .இரவில் அவன் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டான் .
  காலையில் அவன் உணவு வழங்க போய்விட்டு வந்து வண்டியில் இருந்து இறங்கும் போது படிக்கட்டில் விழிந்திருக்கிறது .அதை ஓட்டுனர் பின்னர் தான் கவனித்து எடுத்து வைத்துவிட்டு மாலையில் கொடுத்துள்ளார் .
                   
     எனக்கு சூடு காரணமாக கக்கத்தில் கொப்புளங்கள் வந்தது சட்டை அணிய இயலவில்லை .மூன்று நாட்கள் ஜக்ராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .பாகிஸ்தானி காரோட்டி என்னை அழைத்து செல்வார் .ஒருநாள் சாலையில்.குவைத்தின் அதிகாரிகளின் வாகன சோதனை நடந்தது .காரோட்டி அவரது அக்காமா,ஓட்டுனர் உரிமத்தை காண்பித்தார் .என்னிடம் ESS  அடையாள அட்டையை தவிர எதுவும் கிடையாது .அரபி மொழியும் தெரியாது .
  முன் இருக்கையில் சட்டையும் ,சீட் பெல்ட்டும் அணியாமல் இருந்தேன் .அந்த அதிகாரி என்னுடைய ஆவணங்களை கேட்டார் .இல்லை என்றார் காரோட்டி ஏன் இல்லை என்பதற்கு இவன் அப்தலி எல்லையில் அமெரிக்க இராணுவத்துடன் இருக்கிறான் என்றபோது கேள்வியே இல்லமால் அனுப்பி வைத்தான் .
  வேலை வெகுவாக குறைந்து விட்டதனால் காலை 3 மணிக்கே நாங்கள் கிரிக்கெட் விளையாட தொடங்கினோம் அப்போதே இங்கு வெளிச்சம் வந்துவிடும் .
   இரண்டரை மாதத்தில் டேவிட் அனைவரையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தினார் . நமது நிறுவனம் புதிதாக ஈராக்கில் வேலைக்கு ஒப்பந்தமாகியுள்ளது .உங்களில் விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம் .மற்றவர்களுக்கு இந்தியா செல்ல விமான சீட்டு தந்துவிடுவோம் என்றார் .6 மாத ஒப்பந்தம் இங்கே இரண்டரை மாதம் இருந்தவர்கள் மூன்றரை மாதத்திற்கு பின் ஊருக்கு செல்லலாம் .
   நாங்கள் பத்து பேர் தமிழர்கள் மும்பையிலேயே அறிமுகம் ஆனவர்கள். யோசித்தோம் சதாம் பற்றி வரலாறில் படித்தோம் அந்த அரண்மனைகளை போய் நேரில் ஒருமுறை பார்த்து விடலாம் பிடிக்கவில்லையெனில் மூன்றரை மாதத்தில் திரும்பி வந்துவிடலாம்  என்று யாரோ ஒருவன் சொன்ன யோசனை ஏற்றுகொள்ளபட்டு புறப்பட தயாரானோம் .
விரைவில் செல்ல வேண்டியிருக்கும் செல்லும் தேதி பின்னர் சொல்வோம் என்றார் . ஒரு நாள் ஈராக் பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க மிர்காப் நகருக்கு சென்றோம்.அன்று வெள்ளிகிழமை அங்குள்ள மசூதியில் ஜும்மா தொழுதேன் .
    மாலையில் அங்கு பெருங்கூட்டம் அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் சந்தித்து கொள்கிறார்கள் .வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் அன்று மட்டும் சில மணிநேரங்களுக்காக வெளியே செல்ல அனுமதிக்கபடுகிறார்கள் போல.கூட்டம் கூட்டமாக நின்று சப்தமாக பேசி கொண்டே இருந்தனர். குறைவான நேரம் காரணமாக அதற்குள் அனைத்தையும் பேசி விட வேண்டுமென எண்ணுகின்றனர்.பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.உரையாடல்கள் தெலுங்கில் தான் கேட்டு கொண்டே இருந்தது.தனி தனியே வேலை செய்யும் கணவன் மனைவி கூட அதில் இருந்தனர்.அந்நிய மண்ணில் பிழைப்புக்காக வந்திருப்பதால் கணவனும் மனைவியும் சந்திப்பது சில மணிதுளிகள் வாரத்தில் ஒரு நாள் அதுவும் ஒரு திறந்த வெட்ட வெளி மைதானத்தில் சுற்றிலும் பெருங்கூட்டம்  எல்லாம் ஒரு ஜாண் வயிற்றுக்காக .
நானும் லோகேசும் 6 தினாரில் ஒரே மாதிரியாக பயண பைகளை வாங்கிகொண்டோம்.
 நானும் கார்த்திக்கும்  பக்குபா எனும் இடத்திற்கு தேர்வாகியிருந்தோம் .மற்றவர்கள் வேறு வேறு இடம் என பிரிந்து விட்டனர்.
  அதிகாலை நான்கு மணிக்கு வண்டியில் அழைத்து சென்றனர் .ஈராக் எல்லைக்கு அங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகள்,கார்கள். ராணுவ வாகனங்களும் வரிசையாக நின்றுகொண்டிருந்தது .எங்களுடன் வந்த நான்கு பயணிகள் சிறிய பேருந்துகள் மட்டும் எல்லை காவலர்களால் தடுக்கப்பட்டு திரும்பி எங்கள் கேம்ப்புக்கே வந்தோம் .
   மறுநாளும் அதுபோல் அதிகாலையில் அழைத்து சென்றனர் .நீண்ட வரிசை தினமும் இதுபோல் வரிசையாக ராணுவ பாதுகாப்புடன்(convoy) இராக்கிற்குள் வாகனங்கள் செல்கிறது என தெரிந்தது .
   எல்லையையில் ராணுவ வாகனங்களுடன் சென்ற எங்கள் பேருந்தை நிறுத்திய குவைத்தின் எல்லை காவலரை ஆண்டெர்சன் எனும் ராணுவ அதிகாரி தனது கைத்துப்பாக்கியை அவனுக்கு நேராக காட்டி fuckoff don’t stop all military vehicle என்றதும் எங்களை அனுமதித்துவிட்டு தனது கைபேசியில் யாருடனோ பேச தொடங்கினான் .
     கொஞ்சதூரம் சென்றதும் ஈராக்கின் முகம் தெரிய ஆரம்பித்தது .குவைத்தின் செழிப்பை மட்டுமே இரண்டரை மாதமாக பார்த்த எனக்கு .இராக்கின் வறுமை அதிர்ச்சியூட்டியது .கந்தல் துணிகளை அணிந்த மக்கள் ஒட்டிய கன்னங்கள். கைகளில் வளைந்த கத்தி, கேன்களில் பெட்ரோல் இன்னும் ஏதேதோ பொருட்களை கைகளில் வைத்து கொண்டு வரும் வாகனங்களை கூவி அழைத்தும் கை அசைத்தும் விற்க முயற்சி செய்கின்றனர் .
   என்னால் நம்பவே முடியவில்லை எல்லைக்கு அந்த பக்கம் செழிப்பான குவைத்தும். சில கிலோமீட்டர் தாண்டினால் இங்கு வறுமை.
  எங்கள் வாகனங்கள் எங்கும் நிற்கவில்லை  (இடைநில்லா பேருந்து போல)  முன்பும் பின்பும் ராணுவ வாகனங்கள் அதிநவீன துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றது .ராணுவ ரோந்து வாகனங்கள் பக்கவாட்டில் முன்பும் பின்பும் கண்காணித்து கொண்டே வரும்.
     எல்லை தாண்டியதும் பார்த்த கொஞ்ச மக்கள்தான் .பின்பு நீண்ட புழுதி படிந்த மணல் பரப்புதான் தென்பட்டது .எங்கள் பேருந்தில் கொஞ்சம் ரொட்டி துண்டுகளும் ,தேவையான குடிநீர் புட்டிகளும் இருந்தது .சிறுநீர் கழிக்க வாகனம் இடையில் நிறுத்த இயலாது எனவே அதிகம் தண்ணீர் குடிக்காதீர்கள் என அறிவுருத்தபட்டிருந்தோம் .
  எங்களை அழைத்து சென்ற சிறிய பேருந்து 24 பேர் அமரமட்டுமே முடியும் எங்கள் அனைவரின் பயண பைகளும் வேறு ஒரு டெம்போவில் அடைக்கபட்டிருந்தது .அப்போது தான் நினைத்தேன் சான்றிதழ் அடங்கிய பையை கையிலேயே வைத்திருக்கலாம் என .அது ஆபத்தான பயணம் .வாகனங்கள் குண்டுவீச்சிற்கு இரையாகலாம் அல்லது தீ பற்றி கொள்ளலாம்.
 நீண்ட பயணத்திற்கு பிறகு வண்டி நெடுநேரம் சாலையிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் .என்ன காரணம் என தெரியவில்லை .ரோந்து வாகனங்கள் மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்தது .
  எங்களது பயண பைகள் ஏற்றி வந்த வண்டி ராணுவ வாகனங்களுக்கு இணையான வேகம் கொடுக்க இயலாதலால் ராணுவ வண்டியுடன் இணைத்து கட்டப்பட்டு அதன் ஓட்டுனர் அமர்  எங்களுடைய பேருந்தில் ஏறிகொண்டார் . அமர் இலங்கையை சேர்ந்த சிங்களர் தமிழில் சில வார்த்தைகள் மட்டுமே தெரியும் .அவரது கடவுசீட்டை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பாஸ்போர்ட்க்கான  தமிழ்சொல் கடவுசீட்டு என அதில் தமிழில் எழுதியிருந்தது .
   ஒருவழியாக புறப்பட்டு இருட்டுவதற்குள் வேறு ஒரு அமெரிக்க ராணுவ முகாமை அடைந்தோம் .இரவில் பயணம் மிக ஆபத்தானது எனவே இங்கு தங்கிவிட்டு காலையில் செல்வோம் என்றனர் .
  இரவு உணவுக்கு அங்கிருந்த உணவு கூடத்துக்கு சென்றோம் .காலில் சூ இல்லாதவர்களை  உணவருந்த அனுமதிக்கவில்லை .எனது சூ வும் பயண பையுடன் மாட்டிகொண்டது வெளியே எடுக்க இயலவில்லை.நான் செருப்பு தான் அணிந்திருந்தேன் .

   நண்பன் ஒருவன் 2 பழச்சாறு பாக்கெட் கொண்டு தந்தான் .அதை மட்டும் குடித்து எங்கள் பேருந்தின் இருக்கைகளில் அமர்ந்த படியே தூங்கினோம் .

Wednesday, 21 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் (2)

ஈராக் போர்முனை அனுபவங்கள் .(2) 
அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் .
        நான்குமணி நேர பயணத்திற்கு பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது .11 மணிநேரம் காத்திருப்பு அங்கே .மதிய உணவுக்கான கூப்பன்களை விமான நிறுவன அழகான பெண் ஒருத்தி தந்தாள். முகம் மட்டும் தெரியும் வகையில் உடையணிந்த இஸ்லாமிய பெண் அவள்.
  பஹ்ரைன் பரபரப்பிலாத விமான நிலையம் .நாங்கள் மாலைவரை அங்கேயே உட்கார்ந்தும் ,படுத்தும் தூங்கியும் நேரத்தை கடத்தினோம் .மாலை மீண்டும் அறிவித்தார்கள் .விமானம் மேலும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது தேனீர் தருகிறோம்  வாருங்கள் என .ஒரு நாளில் 12மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருப்பு பெரும் அவஸ்தை .
  2008 ஒருமுறை நியூயார்க் ல் 11மணிநேரமும் , 2013 ல் ஹுஸ்டன் விமான நிலையத்தில் 12 மணிநேரமும் அந்த அவஸ்தை கிடக்கபெற்றேன்.
   இரவில் நாங்கள் குவைத் விமான நிலையம் வந்து இறங்கினோம் .E S S  என்ற தொப்பியணிந்த குமார் எனும் மலையாளி  எங்களுக்காக காத்திருந்தார்.
  நாங்கள் இருபதுபேர் .எங்கள் பைகளுடன் வாகனத்தில் ஏறிகொண்டோம்.2 மணி நேர பயணம் என நினைக்கிறன் .ஈராக் எல்லையில் உள்ள அப்தலி பாலைவனத்தில் எங்களை கொண்டு சேர்த்தனர் .அங்கே பெரிய கூடாரம் இருந்தது அது தான் தங்கும்  குடியிருப்பு என்றார் .
  அங்கு  நேபாள் நாட்டை சார்ந்த இரு காவலாளிகள் மட்டுமே இருந்தனர் .
  வேறு எங்கிருந்தோ எங்களுக்கு உணவு கொண்டு வந்திருந்தனர் .கோழி குழம்பும் ,சாதமும் பச்சை காய்கறிகளும் இருந்தது .சாப்பிட்டு தூங்கி எழுந்தோம் .
  காலையில் விழித்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தால் பாலை மணல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மணல்,மணல் மணல்பரப்பு மட்டுமே .பணியாளர்கள் தங்குவதற்கு 2 கூடாராமும் ,2 சிறிய கூடாரங்களும், அடுமனைக்கு ஒரு பெரிய கூடாரமும்  இருந்தது .பிளாஸ்டிக்கில் செய்த ஒரு கதவுடன் கூடிய அறை தான் கழிவறை .அதை எங்கும் நகர்த்தி செல்லலாம் .உள்ளே ரசாயன திரவம் இருக்கும் .அதனால் அது துர்நாற்றம் எடுப்பதில்லை .தினமும் காலையில் ஒரு வண்டி வந்து அதை உறிச்சிஎடுத்துவிட்டு சுத்தம் செய்து புதிய ரசாயன திரவத்தை ஊற்றி செல்வர். நான் காலையில் முதல் அல்லது இரண்டாவதாக செல்வேன் அதனால் சுத்தமான கழிப்பறை எனக்கு உறுதி .முதல் நாள் உள்ளே போய்விட்டேன் மலம் கழித்து முடிந்த பின்னர் தான் தெரிந்தது அங்கே தண்ணீர் இல்லை என . பேப்பர் தான் தொங்கி கொண்டிருந்தது .முன்பு உல்லாச கப்பலில் வேலை செய்த நண்பன் காதர் சொன்னது ஞபாகம் வந்தது .லே நான் கக்கூசுக்கு போய்ட்டு நேர குளிக்க போயிருவேன் அவனுவோ பேண்டா கழுவ மட்டானுவோ பேப்பர்ல துடக்க கேசு லே .நானும் நேராக குளியலறைக்கு சென்றேன் .
    கதிரவன் உச்சியில் இருக்கும் வேளையில் அதில் சிறுநீர் கழிக்க செல்வதே கடினம்.சூடு மண்டய பிளக்குது என்பான் ஒருவன் .
     ஒரு பிரபல சமையற்காரன் சுனில் வந்த பத்து நாட்களில் ஆட்களை சேர்த்து கொண்டு அந்த பாலையில் நீண்ட தூரம் சென்று வெட்ட வெளியில் காற்று வாங்கி மலம் கழித்து வருவான் .
   எங்களூரில் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் என எதோ சொல்வார்கள் .
   குளிப்பதற்கும் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்ட குளியலறைகள் எதிர் எதிர் வரிசையில் 5 வீதம் இருந்தது  நல்ல வசதியானவை.கதவு தான் கிடையாது .ஒரு பிளாஸ்டிக் திரைசீலை மட்டுமே தொங்கும் .உள்ளே யார் குளிக்கிறார் என யூகித்து விடலாம் .
   நாங்கள் இருந்த இடம் குவைத்தின் எல்லை பகுதி பெரும் பாலை .போர் துவங்கும் முன் அமெரிக்க விமான படை இங்குகொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டு தான்  போருக்கு இராக்கிற்குள் சென்றிருக்கிறார்கள்.
   அவர்கள் ஈராக்கை அமெரிக்கா தரைப்படை வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி நாட்டுக்கு செல்லும் போது குவைத் வழியாக வந்து மீண்டும் இங்கு கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு சென்றனர்.
  எங்களது கேம்ப் போல மொத்தம் 6 கேம்ப் கள் விமான படைக்கு உணவு தயாரித்து வழங்க.
   நாங்கள் சென்ற நான்கு நாட்கள் தினமும் உணவு தாயரித்து சாப்பிடுவோம் வேறு பணிகள் இல்லை .தினமும் 2௦பேர் வீதம் 5 நாளில் நூறு பேர் வந்து விட்டனர்.
 அமரிக்காவை சார்ந்த அதிகாரி வந்து சேர்ந்தார் .6 அடி உயரமும் நல்ல குண்டான உடலும் கொண்டவர் .அவருடன் தலைமை செப் ஆண்டிஎன ஒரு இங்கிலாந்து நாட்டுகார இளைஞன் ஒருவன் .நூறு பேரையும் ஒன்றாக நிறுத்தி நடுவில் நின்று யானையை போல கர்ஜித்தான் அமெரிக்க அதிகாரி .நாங்கள் செய்ய வேண்டிய வேலையை விவரித்தார் .அவர் பேசிய ஆங்கிலம் எதுவுமே எனக்கு புரியவில்லை .நண்பன் வெங்கட்ராமன் நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்தவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான் .அவன் அருகில் நின்று கொண்டு விசயத்தை கேட்டுகொள்வேன் .
    இரண்டு ஷிப்ட்கள்.வயதான தலைமை சமையற்காரர்கள் இருவர்  தலைமையில் இரண்டு குழுவாக பிரிந்தோம்.தலைமை சமயல்காராருக்கு 55 வயது அப்போதே நினைத்தேன் இந்த வயதில் வேலை செய்யகூடாது ஓய்வெடுக்க வேண்டிய வயது இது என.
   6 ம் நாளில் இருந்து பணி துவங்கியது .காலை ,மாலை ,இரவு இரண்டாயிரம் வீதம்  6ஆயிரம்  உணவு தாயரித்து.எல்லாம் நான் இதுவரை பார்த்திராத அமெரிக்க உயர்தர உணவு வகைகள்.அதற்கான பாத்திரங்களில் அடைத்து வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ள உணவுகூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  எனக்கு பகல் பணி .உணவு கொடுத்தனுப்பும் பாத்திரங்கள் வந்து குவியும் அதை  கழுவும் பணியில் அமர்த்தப்பட்டேன்.ஒரு வாரத்திற்கு பின் நன்றாக  வேலை செய்கிறான் என தலைமை சமையற்காரர் என்னை துணை சமையல் காரனுக்கு உதவியாளாக இருக்கும்படி சொன்னார் .அடுமனையில் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டே இருப்போம் .
 
 நானும் ,கார்த்திக்கும் அங்கு சந்தித்த தீபக்குடன் நல்ல நண்பர்களானோம் .மும்மூர்த்திகள்  என பிறர்  அழைத்தனர்.
   குவைத்தின் வேலை விசா வைத்திருந்தவர்கள் எங்களுடன் நிறையப்பேர் இருந்தனர்.அனைவரும் மலையாளிகள் அதில் ஒருவர் இமாம் வெள்ளிகிழமைகளில் ஜிம்மா தொழுகை நடத்துவார் .
  சேட்டன் மிக பிரபலம் .ஐம்பது வயதை நெருங்கியவர் .நல்ல கட்டி மீசையும் தொந்தியுமாக இருப்பார். ஷாஹுலே நினக்கு நரோல் ஆ ,நான் பண்டு அவிடயக்க லோரி ஒட்டியாதாணு .ஒருநாள் போனில் எடி மேரி பைசா எவிட ஈ வெள்ளியாச்சா பைசா தந்தில்லங்கி நின்னே இறக்கிவிடும்  மோளே பின் பல கெட்ட வர்தைகாளால் திட்டினார் .
 வெள்ளைக்காரன் ஆண்டி சேட்டன் என்றாள் என்ன அர்த்தம் என கேட்டான் .பின் அவனும் ஜார்ஜ் ஐ சேட்டா என்றே அழைத்தான் .
  ஒருநாள்  ஜார்ஜ்க்கும் எனக்கும் சண்டை ஜார்ஜ் மலையாளிகளை துணைக்கு அழைத்தான் .எனக்கு துணையாக தீபக் வந்தான் மச்சான் என்னடா பிரச்சனை என ஜார்ஜ் ஐ மிரட்டினான்  மற்றவர்கள் மலையாளிகுக்குள் சண்டை வேண்டாம் தீபக் நீ போ என்றனர் .ஒத்தா எவன்டா வாடா அவன் என் நண்பன் எனக்கு மலையாளி தமிழ் ஒன்னும் கிடையாது .மச்சான் பார்த்துருவோம் இவனுகள அடிச்சு போட்டுட்டு ஊருக்கு போகவும் நான் தயார் என்றதும் அனைவரும் விலகி சென்றனர் .
   இரண்டு வாரங்களுக்கு பின் வாரம் ஒருநாள் விடுமுறை. நாங்கள் மூவரும் ஒரே நாளில் விடுமுறையை வாங்கி கொண்டோம் .விடுமறை நாளன்று  குவைத்தின் மிர்காப் நகருக்கு வண்டியில் அழைத்து செல்வர் .காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை அங்கே உள்ள குளிரூட்டப்பட்ட வணிகவளாகங்களில் சுற்றி வருவோம்.பார்க்கும் அனைத்து பொருட்களும் தேவையுள்ளதாகவே தோன்றும் .

  அப்போது போர்முனை சலுகை என வாரம் 14 குவைத் தினார்கள் கிடைத்தது .அதிகபட்சம் 3 தினார்களுக்கு மேல் செலவில்லை எனக்கு.அங்குள்ள இந்திய உணவகத்தில் 750 பில்க்குஸ் மதிய சாப்பாடு.(1000 பில்ஸ் 1 தினார் )சில நாட்களில் நாங்கள் மூவரும் 5 மணி வண்டியில் செல்வதில்லை 8 மணி வரை சுற்றிவிட்டு தனியாக மலையாளி ஒருவரின் டாக்சியில் செல்வோம் .
21-09-2016
ஷாகுல் ஹமீது .
நேற்று இணையம் இல்லாததால் பதிவேற்ற இயலவில்லை