Sunday, 14 August 2016

தாயன்பு

                                                                 தாயன்பு
    நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும் அங்கு செல்லப்பன் ஆசான் காம்பவுண்ட் ,இது பொது வழி அல்ல என்று எழுதியிருக்கும் காந்தாரிவிளையின் நுழைவு வாயிலில் .
    செல்லப்பன் தாத்தா ஐந்தரை அடிக்கு மேலே உயரமும் கொஞ்சம் குண்டான நல்ல கட்டுமஸ்தான உடல்வாகும் கொண்டவர் .மரத்தாலான கதை போன்ற ஒன்று  அவர் வீட்டில் இருக்கும் அவர் அதில்தான் உடற்பயிற்சி செய்வார் .நல்ல வெற்றிலையும் சுவைப்பார் .
  எலும்பு முறிவு ,கை,கால் பிசகுதல்,தென்னை,பனை மரத்திலிருந்து கீழே விழுபவர்கள் ,மீன்பிடிக்க செல்லும் போது அடிபட்டு வருபவர்கள் என  சிகிழ்சையளிப்பார். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிருந்து பலரும் அவரிடம் சிகிழ்ச்சை பெற்று நலம் பெற்றனர் .மூலிகை தைலத்தால் தடவி கட்டு போடுவார் ,முறிவு என்றால் மர துண்டுகளை வைத்து கட்டு போடுவார்.
  அவர் வீட்டிலேயே அதற்கான மூலிகை தைலத்தை தயாரிப்பார். சிகிழ்ச்சைக்காக அவராக காசு கேட்கமாட்டார் .நாமாக எதாவது விரும்பி கொடுத்தால் அவரது வெற்றிலை பெட்டியில் வைக்க சொல்வார் .ஒரு முறை நடிகர் மோகன் முட்டத்திற்கு படபிடிப்புக்கு  வந்தபோது கால் பாதம் பிசகி செல்லப்பன் ஆசானிடம் தைலம் போட்டு தடவி சென்றார்.எனக்கும் இரு முறை கால் மூட்டு கீழே விழுந்து விலகியபோது அவரே தடவியும் ,தைலம் போட்டும் சரியாகியது அதுவும் இலவசமாகவே .அவர் பசு மாடுகளுக்கும் சிகிழ்ச்சையளிப்பதால் அவர்  மாட்டுவைத்தியர் எனவும்  பல முகங்களை கொண்டவர் .
   அவர் நினைத்திருந்தால் பெரும் பொருள் ஈட்டியிருக்கலாம். அப்போதெல்லாம் மருத்துவம் பொருள் ஈட்டுவதற்க்காக செய்யவில்லை .மேலும் வீட்டருகே ராமகிருஷ்ணன் வைத்தியர் நாடி பார்த்து நோயை அறிந்து மருந்து தருவார் அவரும் நோயாளிக்களுக்கான மூலிகை மருந்தை வீட்டிலேயே தயாரிப்பவர்,குழந்தைகளுக்கும் மருத்துவம் செய்வார்.அது போல வேலுவைத்தியர் அவர்களெல்லாம் அப்போது மருத்துவத்தை சேவை நோக்கிலேயே செய்தனர் .
     செல்லப்பன் தாத்தாவின் வீட்டு முற்றத்தில் கிணற்றுக்கு அருகில்  பாக்கு மரமும் ,தென்னை மரங்களும் இருக்கும்.அவர் அதன் நிழலில் சாய்வு நாற்காலியில் மதியஉணவிற்கு பின் படுத்து ஓய்வெடுப்பார். நான் குழந்தையாக இருக்குபோது செல்லப்பன் தாத்தாவின்  தொப்பையில் கவிழ்த்து படுத்து விளையாடி கொண்டிருப்பேன் .
   அப்போதெல்லாம் குழந்தைகளை 3 வயதில் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள் .அது எங்களூரில் அரை கிளாஸ் எனப்படும் .நானும் சென்று வருவேன் .ஆண் குழந்தைகள் 2 வயதில் 52 வார்த்தைகளும் ,பெண்குழந்தைகள் 54 பேசவேண்டும் என கேட்டிருக்கிறேன் .
   ஆனால் எனக்கு பேச்சு திருத்தமாக வரவில்லை .என் வீட்டருகில் இருந்த தாய்மார்கள் அவர்கள் கூடியிருந்து கதை பேசும் மாலை வேளைகளில் என்னை அழைத்து .சாலமது இண்ணக்கி அர கிளாசுக்கு என்ன கொண்டு போனா .நான் சோவு,மோவு ,ஊகா என சொல்வேன் .நேத்து ராத்திரி தாத்தா வீட்டு பட்டி(நாய்) எப்படி குலச்சது ,அவ் ,அவ் என குலைத்தது என்பேன்( இது இப்போதும் என் நினைவில் இருக்கிறது ) .அவர்கள் நகைத்து மகிழ்த்திருக்கலாம் .அதன் பின் எனது எட்டு வயதில் நடந்தவையே நினைவுக்கு வருகிறது .
   எனது உம்மா (அம்மா)மட்டும் கவலைபட்டிருப்பாள் ,குழந்தைக்கு பேச்சு வரவில்லையே என .தாயன்பு ,பத்து மாதம் கருவில் சுமந்தவள் எப்படி கவலை இல்லாமல் இருந்திருப்பாள் .காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே .பெண்ணின் முழுமை தாய்மை .தாய்மையை அடைந்தவர்களுக்கு தானே அதை உணரவும் முடியும் .தாயன்பு தானே எல்லாவற்றிலும் மேன்மையானது .தாய் குழந்தையிடம் காட்டும் அன்பு மட்டுமே முழுமையானது ,எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது .ஆம் எல்லா தாயும் தான் .
     எனது மகன்களின் குழந்தை பருவத்தில் என் மனைவியும் அப்படித்தான் இருந்தாள் .அவள் தூங்கி விட்டாள் எழுப்பவே முடியாது,இடியோசை கேட்டாலும் தூங்கிகொண்டிருப்பாள்  .ரமலான் மாதங்களில் ,நோன்பு வைக்க அதிகாலை 3 மணிக்கே அவளை எழுப்ப துவங்கினால் தான் 3.30 க்காவது எழுவாள் .ஆனால் ஷாலிமும் ,ஷல்மானும் குழந்தையாக இருக்கும் போது அவள் எப்போது தூங்குவாள் என்றே எனக்கு தெரியாது .பின்னிரவில் படுத்திருந்திருப்பாள் குழந்தையின் ஒரு சிறு முனகலில் விழித்து விடுவாள் .மேலும் பால் புகட்ட ,குழந்தை சிறுநீர் கழித்து ஈரமான உடை மாற்ற என பலமுறை .
   குழந்தைகளின் மொழி தாய்க்குதானே நன்றாக தெரிகிறது .பசித்தால் எப்படி அழும் ,உடை ஈரமானால் அதன் அழுகை எப்படி எனவும்  ,முக பாவனையிலேயே தாய்க்கு தெரியும்  மலம் கழிக்க போகிறது என .
  எனக்கு எட்டு வயதிருக்கும் போது உம்மாவிடம் யாரோ சொன்னார்கள் கோட்டாரிலுள்ள ஒரு பள்ளிக்கு குறிப்பிட்ட பிறையில் 3 நாட்கள் நோன்பிருந்து ,உன் புள்ளைய எட்டு வீடுகளில் பிச்சை எடுக்கவைத்து அந்த காசில் மிளகும் ,உப்பும் வாங்கி பள்ளியில் வைக்கவும் ,ஏழைகள் சிலருக்கு உணவளிக்கவும் செய் .உன் மகன் பேசுவான் என .
   என்  தாய் நோன்பிருந்து என்னை பிச்சைஎடுக்க அனுப்பினாள் பக்கத்து வீடுகளில் ,முதலிலேயே சொல்லிவைத்திருந்தாளாம் அவர்களிடம் புள்ள வருவான் நேர்சைக்கு என .அவுக்கார் பெத்தா ,வீட்டு வாசலில் நின்று பிச்சைகேட்டது இப்போதும் என் கண்முன்னே காட்சியாகிறது .நேர்ச்சையை நிறைவேற்றினாள் என் தாய் .அவளது விடாபிடியான நம்பிக்கையும்,நோன்பும்,ஆள்மனதின் சங்கல்ப்பமும் வீண் போகவில்லை .இறைவனிடம் மண்டியிட்டு அழுதிருப்பாள் எட்டு வயது வரை மகனுக்கு பேச்சு சரியாக வரவில்லையே என .
  

    இப்போதெல்லாம் நான் எப்படி பேசுவேன் என என்னை தெரிந்த அனைவருக்கும் தெரியும் .நீ பேசியது போதும் நிறுத்துப்பா என்றே சொல்வார்கள் .திருமணமான புதிதில் ஒருமுறை சுனிதாவிடம் இதை சொல்லிகொண்டிருந்த போது அவள் மாமி மூன்று நாள் நோன்பை இரண்டாக  குறைச்சிருக்கலாம் ரொம்ப பேசுறாரு என்றாள் உம்மாவிடம் .
  2005 ல் வேலை செய்துகொண்டிருந்த கப்பலில் இருந்து வேறு கப்பலுக்கு மாற்றமாகி சென்றேன் .ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் பழைய கப்பலின் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபோது ஷாகுல் தும் கெயா ஜாஹாஜ் சாந்த் ஓஹையா(நீ சென்றதும் கப்பல் அமைதியாகி விட்டது ) என்றனர் .
   இப்போதும் குழந்தைகளுக்கு உடல் முடியாமல் ஆகும் போதும் ,சில இன்னல்களின் போதும் தொடர்ந்து வாரம் தோறும் ஏழைகளுக்கு உணவு அல்லது அதற்க்கான பொருட்களை கொடுப்பதும் வழக்கமாக செய்து வருகிறார் .
   குழந்தைகளின் பிறந்தநாட்களில் கேக் வெட்டுவதை விட 5அல்லது 7 என ஒற்றைபடை யில் ஏழைகளுக்கு உணவளிக்கவே விருப்பம் .படித்தவர்களுக்கு இதிலெல்லாம்  நம்பிக்கை இல்லை .அவர்கள்  எப்போதும் கேள்விகள் கேட்பார்கள் .
   ஆங்கில கவிஞன் மில்ட்டனின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது . தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திற்கு தெரியாமல் ஒரு பூவை கூட நீங்கள் கிள்ள முடியாது என.நமது எண்ணங்கள் இந்த பிரபஞ்சம் முழுமையும் பரவுகிறது .அந்த இறையாற்றலே அனைத்து உயிர்களுக்கும் உதவி செய்கிறது .
இதையே குர்-ஆனும் ,கீதையும் குறிப்பிடுகின்றன .இயேசு மகானும்  வள்ளுவரும்,பாரதியும் ,இதையே சொன்னார்கள் .
எண்ணியர் எண்ணியாங்கு எய்துபர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் .


    என் தாயின் உறுதியான நம்பிக்கை அது தன் மகன் பேசுவான் என .
 ஷாகுல் ஹமீது ,
14-08-2016.
        

7 comments:

 1. அருமை ஐயா. சொந்த அனுபவமானாலும் நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு எனும் மகா வாக்கித்திற்கிணங்க அருமையான கட்டுரை.

  ReplyDelete
 2. அருமை ஐயா. சொந்த அனுபவமானாலும் நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு எனும் மகா வாக்கித்திற்கிணங்க அருமையான கட்டுரை.

  ReplyDelete
 3. பிரமாதம் அருமை சாகுல் !

  ReplyDelete
 4. பிரமாதம் அருமை சாகுல் !

  ReplyDelete
 5. அம்மா
  அம்மா

  ReplyDelete