Friday 15 April 2016

                      உண்ணி சாருக்கு அஞ்சலி



   03-04-2016 ல் காலை சுமார் பத்து மணிக்கு  நண்பர் வேலுபிள்ளை இந்தியா வந்ததை அறிந்து தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது தம்பி ஷோபனின் கைபேசி எண் கிடைத்தது  அழைத்தபோது அவரால் பேச இயலாமல் மல்லி டீச்சரின் கணவர் ரமேசிடம் கொடுத்துவிட்டார் .

    உண்ணிசாருக்கு நெஞ்சுவலி எனவும் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில் சேர்த்திருந்து உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் நெஞ்சுவலி வந்து மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்துகொண்டிருப்பதாக சொன்னார் .

   மறுநாள் காலையில் வேலுபிள்ளையிடம் உண்ணிசாரின் உடல்நலம் விசாரிப்பதற்காக  அழைத்தபோது முந்தையநாள் மதியம் அவர்  இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெருந்துயருற்றேன் .

       எனக்கு 12 வயதிருக்கும்போது பாபூஜி பள்ளியில் உண்ணிசார் பூபந்து விளையாடுவார் என்னிடம் ஒரு மட்டையை தந்து களத்திற்கு வெளியே அடிக்கப்படும் பந்துகளை  எடுத்து கொடுக்கவேண்டும்  .அவர்கள் விளையாடி முடித்தபின் சிறிதுநேரம் எனக்கு விளையாட சொல்லிதருவார்கள் .

                  பூபந்து விளையாட்டில் அவரை தேர்ந்த நிபுணர் என்றே சொல்லலாம் .களத்தில் சட்டை அணியாமல் அவரது சற்று கனத்த உடலை வைத்துகொண்டு மிக லாவகமாக  பந்துகளை  அடிப்பது இப்போதும் என் கண்முன் காட்சியாகிறது , மனோகரன் மாமா ,முட்டாய் ஜாகிர் மற்றும் சிலருக்கு உண்ணிசார்தான் குரு .
          
 மாநில  அளவிலானா  பூபந்து போட்டிகளை அவர்கள் இணைந்து நடத்துவார்கள்.
   
பூபந்து மட்டையின் அறுந்த கட்ஸ்களை  வீட்டில்  வைத்து அவர் நேர்த்தியாக கட்டுவதை பார்த்திருக்கிறேன் .அது திறமையானவர்கள் மட்டுமே செய்ய இயலும் என்பதை  நான் வாலிபன் ஆன பின்தான் தெரிந்து கொண்டேன் .
  
எனது 19 வது வயதில் அவருடன் இணைந்து களத்தில் விளையாடிய அனுபவம் மறக்க இயலாது .
           
பாபூஜி பள்ளியில் தலைமை  கிளார்க்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார் ,அவர் பிறரிடம்  அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை .அனைவருடனும் அன்பும் ,நல்  மதிப்பும் உள்ளவர் .
    
எங்களது குடும்பத்துடன் அவர்களுக்கு  நெருங்கிய தொடர்பு இருந்தது .அவர்கள் நாகர்கோயிலில் புதிய வீடு கட்டி குடியேறியபோது (1995 என நினைவு )நான்  ,பாபு மற்றும் நண்பர்கள் சென்றிருந்தோம் .
    
எனது சகோதரியின் திருமணத்திற்கு முந்தைய நாள் (1997 மார்ச் 4 ல்) உண்ணிசார் தனது இளைய மகன் ஷோபானுடன் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் வந்து சிறப்பித்தார்கள் .எனது அண்ணனின் திருமணத்திலும்  கலந்துகொண்டார்கள் .
   
எனது  நெருங்கிய நட்பான மல்லன்பிள்ளை மாமாவின் மகள் லதாவை உண்ணிசாரின் மருமகன் சிவம் அவர்கள் திருமணம் செய்தபோது அவர்களுடன் நெருக்கம் மேலும் அதிகரித்தது .
   
வேலுபிள்ளை பார்ட்னராக இருக்கும் ஹரிகிருஷ்ணா ஆட்டோ மொபைல்ஸ் திறப்புவிழாவிற்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு நான் மனைவி  சுனிதாவுடன் சென்றிருந்தேன் . உண்ணிசாரிடம் நானும்  வேலுபிள்ளையும்  அமெரிக்காவில் சந்தித்ததைப்பற்றி கூறியபோது   மிக உற்சாகமாக இருந்தார் .திருவனந்தபுரதிலிருந்து வந்திருந்த  வேலுபிள்ளையின் மனைவியின் பெற்றோர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் .அப்போது நினைக்கவில்லை அதுதான் நான் அவரை கடைசியாக சந்திக்கிறேன் என .
         
கடந்த 4 ம் தியதி காலையில் அவரது உடலைத்தான் குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டியில்  பார்க்க முடிந்தது .அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ,அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
  
அவருக்கு  மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உண்டு .மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது .வேலுபிள்ளை எனக்கு நீண்டகால நண்பர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பணிபுரிகிறார் ,ஷோபன் சென்னையில் பிரபல வக்கீல் .
   
உண்ணிசாரின் இயற்பெயர் பத்மநாபன் என்பது பலரும் அறியாதது .

ஷாகுல் ஹமீது .

    

2 comments:

  1. அண்ணா.... நல்ல பதிவு....
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்......

    சரவணன்.சி

    ReplyDelete